புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஆம் ஆத்மியில் இணைந்த 6 பேரின் பெயர்களும் உள்ளன.
பிரம்ம சிங் தன்வார் (சத்தார்பூர்), அனில் ஜா (கிராரி), பி.பி.தியாகி (லட்சுமி நகர்), ஜுபேர் சவுத்ரி (சீலாம்பூர்) ஆகிய மூவரும் சமீபத்தில் பாஜகவை விட்டு விலகி ஆம் ஆத்மியில் இணைந்தவர்கள். வீரசிங் திங்கன் (சீலாம்புரி) , சோமேஷ் ஷோகீன் (மட்டியாலா) ஆகியோர் காங்கிரஸை விட்டு விலகி ஆம் ஆத்மியில் இணைந்தவர்கள்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடந்த அரசியல் விவகாரக் குழு கூட்டத்துக்கு பிறகு இந்தப் பட்டியல் வெளியானது.