தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கடும் கண்டனம்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக ஆசிரியை ரமணி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காட்டுமிராண்டித்தனமான இச்செயலை செய்தவருக்கு கடும் தண்டனையை தமிழக அரசு வழங்கிட வேண்டும். இந்த கொடூரமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணத் தொகை அளிக்க வேண்டும்

மேலும் அக்குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். மறைந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு பள்ளிகளில் யார் வேண்டுமானாலும் நுழைந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருப்பதால் தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை அரசு பள்ளிகளுக்கு செய்து தர வேண்டும்

இந்நிலையை போக்க பள்ளியில் காவலர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.