வாரங்கல்: தெலங்கானா மாநிலம் வாரங்கல் ராம்பல்லியை சேர்ந்தவர் ஏலேந்தர் (35). இவர் கினரா எனும் இடத்தில் சொந்தமாக வீடுகட்டி வருகிறார். இவர் புதன்கிழமை மாலை புதிதாக கட்டப்பட்டு வரும் தனது வீட்டை காண பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் ஏலேந்தர் தூக்கி எறியப்பட்டார். இதனை பார்த்து பொதுமக்கள் கூச்சலிடவே, லாரி ஓட்டுநர் லாரியை பின்னால் எடுத்தார். இதனால், லாரியின் சக்கரம், சாலையில் விழுந்த ஏலேந்தரின் இரு கால்களின் மீது ஏறி இறங்கியது. உயிருக்கு போராடிய ஏலேந்தர், மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கும்படி அங்குள்ள மக்களிடம் கெஞ்சினார். ஆனால், யாரும் இதனை கண்டுகொள்ளாமல், காப்பாற்ற முன் வரவில்லை.
மாறாக அங்கிருந்தவர்கள், தங்களின் செல்போன்களில், ஏலேந்தர் படும் அவஸ்தையை படம் பிடித்தனர்.
சிலர் செல்ஃபி கூட எடுத்துக்கொண்டனர். இதில் யாரோ 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததில், 15 நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து, ஏலேந்தரை அருகே உள்ள ஓர் அரசு மருத்துமனைக்கு கொண்டு போனது. அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நிமிடங்களிலேயே ஏலேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். சில நிமிடங்களுக்கு முன் கொண்டு வந்திருந்தால், ஒருவேளை ஏலேந்தர் பிழைத்திருக்கலாம். ஏனெனில் ரத்தம் அதிகமாக போய் விட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வாரங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, லாரி ஓட்டுநர் லட்சுமணனை கைது செய்துள்ளனர்.