பட்டையை கிளப்பும் பிஎஸ்என்எல்… ஓரம்போகும் ஜியோ, ஏர்டெல் – திடீர் சரிவுக்கு என்ன காரணம்?

Telecom News In Tamil: பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்தி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, தொடர்ந்து மூன்றாவது மாதமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துகொண்டு வருகிறது. 

பிஎஸ்என்எல் நிறுனவத்திற்கு மொத்தம் 91.89 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பிஎஸ்என்எல் சந்தை மதிப்பும் 7.98% அளவுக்கு உயர்ந்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஜூலை மாதத்தில் 2.94 மில்லியன் வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் பெற்றது இங்கு கவனிக்கத்தக்கது.

முன்னணி நிறுவனங்களுக்கு பின்னடைவு

அதே நேரத்தில், இந்திய தொலைத்தொடர்பு துறை ஆட்டிப் படைத்துவரும் முதன்மையான தனியார் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடஃபோன் ஐடியா (Vodafone Idea) உள்ளிட்டவை தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் இந்த மூன்று நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெளியேறுவதற்கு முதன்மையான காரணமாக இருந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களும் 25% அளவில் விலை உயர்த்தப்பட்டது. 

விலை உயர்த்தப்பட்ட அந்த மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனங்களை கைவிடத் தொடங்கினர். இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து இந்த செப்டம்பரில் மட்டும் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, முன்னணி நிறுவனமான ஜியோவில் இருந்து 7.9 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 1.4 மில்லியன் வாடிக்கையாளர்களும், வோடஃபோன் நிறுவனத்தில் 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களும் வெளியேறியிருப்பதாக TRAI தெரிவித்துள்ளது.

நிறுவனத்தை மாற்றும் வாடிக்கையாளர்கள்

அதிலும், ஒரு மொபைல் நம்பரை ஒரு நிறுவனத்தில் இருந்து அடுத்த நிறுவனத்திற்கு மாற்றும் Mobile Number Portability (MNP) என்ற சேவையை பயன்படுத்த மட்டும் 13.32 மில்லியன் கோரிக்கைகள் எழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

உதாரணத்திற்கு, நீங்கள் ஜியோவில் பயன்படுத்தும் மொபைல் நம்பரை அப்படியே வைத்து, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற்றியும் பயன்படுத்தலாம். இந்த 13.32 மில்லியன் கோரிக்கைகளில், 7.48 மில்லியன் கோரிக்கைகள் முதல் மண்டலத்தில் இருந்தும், மீதம் உள்ள 5.84 மில்லியன் கோரிக்கைகள் இரண்டாவது மண்டலத்தில் இருந்தும் பெறப்பட்டுள்ளது. முதல் மண்டலம் என்பது வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களை உள்ளடக்கியதாகும். இரண்டாவது மண்டலம் என்பது தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை உள்ளிட்டக்கியதாகும். 

ஜியோவும்… பிஎஸ்என்எல்லும்

முதல் மண்டலத்தில் மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து அதிக MNP கோரிக்கைகள்  எழுந்துள்ளன. இரண்டாம் மண்டலத்தில் மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து அதிக MNP கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கினாலும் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் இன்னும் 5ஜி டேட்டா சேவையை தொடங்கவில்லை. 

அதிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வரம்பற்ற அளவில் இலவசமாக 5ஜி சேவையை வழங்கியும், இரு நிறுவனங்களில் இருந்தும் வெளியேறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எளிமையான பிளான்களால் கவரப்படுகிறார்கள். சேவையை மட்டும் பிஎஸ்என்எல் இன்னும் மேருகேற்றும்பட்சத்தில் பெரிய லாபத்தை அந்நிறுவனம் குவிக்க வாய்ப்புள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.