சுகாதாரத்தில் குறைபாடு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மனித உரிமை மீறல்கள், சமத்துவமின்மை போன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை உலக அளவில் மக்களிடம் கொண்டு சென்றதில் தொலைக்காட்சிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதன் சேவை தற்போதும் தொடர்கிறது. 2020ஆம் ஆண்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே திணறியபோது கரோனாவின் தீவிரம், பாதிப்பு, சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் பற்றித் தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் ஏராளமானோர் பயன் பெற்றனர்.
இதுபோல, தொலைக்காட்சி அறிமுகமாகி சாமானியரின் வீடுகளுக்குள் குடிபுகுந்த காலம் முதல் சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசாலும் தனியாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் 1959-இல் பரிசோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட தூர்தர்ஷன் தொலைக் காட்சியின் ஒளிபரப்புச் சேவை பின்னாளில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் சுகாதாரம், கல்வி விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதில் ‘எழுத்தறிவு’, ‘எய்ட்ஸ்’, ‘போலியோ சொட்டு மருந்து’, ‘கண் தானம்’, ‘ரத்த தானம்’ பற்றிய விழிப்புணர்வு, உணவில் முட்டை சேர்ப்பதன் முக்கியத்துவம் பற்றிய அறிவிப்புகள் (Public Service announcements), பிரச்சாரங் களால் மக்கள் பயன்பெற்றனர். இவை போன்று விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இன்றும் வெளியாகின்றன. இணையப் புரட்சியால் சமூக வலைதளங்கள் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டபோதும் சிறியவர் முதல் பெரியவர் வரை பாலினப் பாகுபாடின்றி அனைத்து மக்களையும் சென்றடைய தொலைக்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
இன்று – நவ.21 – உலக தொலைக்காட்சி தினம்