மதுரை: “எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது; ஆனால்… " – ஆதவ் அர்ஜுனா பேச்சு

“திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும், பிரச்னை வருவதைத்தான் எதிர்பார்க்கிறோம், அப்போதுதான் தீர்வு கிடைக்கும்…” என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா

மதுரை விசிக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்துகொண்டார். அப்போது பேசும்போது, “ஆதிக்க மன நிலையை தூக்கி எறியப்படக்கூடிய அரசியலைத்தான் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆணவப் படுகொலை அதிகமாக நடக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் , ஆணவப்படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வு பள்ளிக் கல்வியிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். தலித் அரசியல் என்பது சாதிய அரசியல் அல்ல. மனித இனத்திற்கான அரசியல். வலதுசாரி, இடதுசாரி என பேசக் கூடியவர்கள் கூட ஆணவப் படுகொலையைப் பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் மிகப்பெரிய துயரம்.

ஆயிரம் வருடங்களைக் கடந்தும் சமமான நிலையை உருவாக்க முடியவில்லை. கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் பெரிதாக சாதிக்க முடியவில்லை. முக்கியமாக தலித் மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை.

25 சதவிகிதம் இருக்கும் தலித் மக்களுக்கு எந்த அளவிற்கு பொருளாதார வலிமை உள்ளது? எந்த அளவிற்கு நிலங்கள் சொந்தமாக இருக்கிறது? என்ற கணக்கை அரசு வெளியிட வேண்டும். 10 லட்சத்திற்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்கள் எங்கு சென்றது? கமிட்டி போட்டு ரொம்ப வருஷம் ஆச்சு, ஏன் தரவுகளை வெளியிடவில்லை? தலித் மக்களுக்கு சென்றடைய வேண்டிய உரிமை எங்கு மறுக்கப்படுகிறது? எந்த நிலங்களை வைத்து சாதிய ஒடுக்குமுறை உருவாகியதோ, அந்த நிலங்கள் தலித் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டும்.

ஆதவ் அர்ஜுனா

கோயில் எல்லோரும் சமம் என்று செல்லும்போது தலித் மக்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அப்போது வருவாய் துறையும் காவல் துறையும் கோயிலுக்கு பூட்டு போடுவதால் தீர்வு கிடைக்காது. கோயிலுக்குள் தலித் மக்களை வரக்கூடாது என்று சொல்பவர்களை கைது செய்ய வேண்டும், கோயிலுக்கு பூட்டு போட்டுவிட்டால் நீதித்துறை மூலம் தீர்வு கிடைக்க கால தாமதவதால் உடனடியாக நீதி கிடைக்காது. கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொல்லும் குரலை கைது செய்ய வேண்டும். பிறப்பால் எல்லோரும் சமம் இல்லை என்கிறவர்களை கைது செய்து தனிமைப்படுத்தி மனநல மருத்துவர்களைக் கொண்டு கவுன்சிலிங் கொடுக்கும் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும். கோயிலுக்கு பூட்டு போடாமல் அதே நொடியில் தலித் மக்களுக்கான உரிமையை இந்த அரசு மீட்டெடுத்து கொடுக்க வேண்டும்.

ஆணவப்படுகொலையை தடுக்கும் சட்டத்தை உருவாக்க வேண்டும். பஞ்சமி நிலங்களுக்கான தரவுகளை தமிழக அரசு வெளியிட வேண்டும். இன்றைக்கும் 25 சதவிகிதம் மக்கள் காலனிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,

தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினால் வன்முறையாளர்கள் என்றும் சிறுபான்மையின மக்கள் உரிமைகளை கேட்கப்படும்போது தீவிரவாதிகள் என்றும் சொல்பவர்கள், இப்போது உரிமையைக் கேட்டால் சங்கி என்கிறார்கள். வரக்கூடிய சட்டமன்ற பட்ஜெட்டில் தலித் குடியிருப்புப் பகுதிகளுக்கென தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் ,

தலித் இளைஞர்கள் அமெரிக்காவிலும் லண்டனில் படிப்பதற்கு பல திட்டங்களுடன் எங்கள் பயணத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் உணர்வுபூர்வமானது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தன் உரிமையை கேட்கும் போது விமர்சனங்களும் பிரச்சனைகளும் எழும் என்பது தெரியும்.

ஆதவ் அர்ஜுனா

தற்போது தொலைக்காட்சிகளில் என் ஜாதிப் பெயரை சொல்லிப் பேசுகிறார்கள், எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் இருக்கிறேன். இது பெரியார் அம்பேத்கருடைய இயக்கம். எம்எல்ஏ, எம்பி ஆக நான் வரவில்லை ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு பிரசாரத்தை உருவாக்கதான் இங்கு வந்தேன். திருமாவளவனின் வலியுறுத்தலில் வந்திருக்கிறேன். ஜாதி பெயரை சொல்வது, யூ டியூபில் விமர்சிப்பைதையெல்லாம் சிறு வயதில் அம்பேத்கர், பெரியார் புத்தகங்களை படிக்கும் போதே பாத்துவிட்டோம். பிரச்னை வருவதைத் தான் எதிர்பார்க்கிறோம். அப்போது தான் தீர்வு கிடைக்கும்.

கொள்கைக் கூட்டணி, அதிகாரக் கூட்டணி என்று சொல்வார்கள். அப்படியென்றால் அதிகாரத்தை தலித்திடம் கொடுங்கள். ஒருத்தர் மட்டும் ஆள்வதற்குப் பிறக்கவில்லை. எங்களுக்கான அரசியல் பிரசாரத்தை உருவாக்கத் தெரியும். திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும்.

ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு தான் பொறுமையையும் கல்வியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், கோபத்தில் வன்முறைக்கு பதிலாக கையில் பேனா எடுக்க அம்பேத்கர் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

நான் புதிதாக வந்திருந்தாலும் தோழர்களுடைய ஆதரவோடு இயக்கத்தை வலிமையானதாக்க எப்போதும் திருமாவளின் பாதையில் பயணம் செய்வேன். நமக்கான குறிக்கோளை அடைவோம் நமக்கான பயணத்தை புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார் வழியில் அடைவோம்” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.