US Company Gives An Opportunity To Scold Their Bosses : இந்த டெக்னாலஜி உலகில், தினந்தோறும் நடைபெறும் வினோதங்கள் குறித்து சொல்லி மாளாது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், நாம் அதற்கு ஈடுகொடுத்த வேகமாக மாற வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். புதுப்புது தொழில்நுட்ப மாற்றங்கள் தினந்தோறும் நடந்து வரும் நிலையில், தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்று புகுத்தியிருக்கும் புதுமை குறித்து இங்கு பார்ப்போமா?
மேனேஜரை திட்டுவதற்கென்றே செயலி:
ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த நிறுவனத்தின் முதலாளி கூட அவ்வளவு கடுமையாக நம்மிடம் நடந்து கொள்ள மாட்டார். ஆனால், நம் தலைக்கு மேல் அமர்ந்திருக்கும் நமது மேல் அதிகாரிதான், அந்த நிறுவனத்தையே ஏதோ கட்டிக்காப்பது போல, நம்மை வஞ்சிக்கொண்டே இருப்பார். விடுப்பு கேட்டால், 5 நிமிடங்கள் தாமதமாக வந்துவிட்டால், வெளியில் செல்ல அரை மணி நேரம் பர்மிஷன் போட்டால் என அனைத்திற்கும் அந்த மேலதிகாரியிடம் இருந்து திட்டு வாங்க வேண்டியதாக இருக்கும். இதை சமாளிக்க, அமெரிக்க நிறுவனம் புதிய செயலி ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. இதன் சேவை மூலம், மேனேஜரை திட்டி தீர்த்துக்கொள்ளலாம்.
இந்த செயலியில், தங்களது முதாலிகளை அல்லது மேலதிகாரியை திட்டுபவர்களின் அடையாளம் மறைக்கப்படும். வெளியில் வந்து பேசுபவர்கள், எந்த பயமும் இன்றி தங்கள் மனக்குறைகளை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படியொரு செட்டிங் இதில் இருக்கிறது. இதன் மூலம், தொழிலாளிகள் தங்கள் முதலாளிகள் தங்களிடம் செய்யும் அட்டூழியங்களை கூறலாம், புகாராக தெரிவிக்கலாம் அல்லது புலம்பி தீர்க்கலாம்.
காமெடியன் கண்டுபிடித்த நிறுவனம்:
OCDA என்ற இந்த அமெரிக்க நிறுவனத்தை, மேடை நகைச்சுவை கலைஞரும் நடிகருமான காலிமர் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் அனைவருக்கும் சமமான மரியாதை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த செயலியை ஆரம்பித்திருக்கிறார்.
இது எப்படி வேலை செய்யும்?
இந்த செயலியில், ஒருவர் தங்களின் முதலாளி குறித்து புகார் தெரிவிக்கிறார் என்றால், அந்த நிறுவனத்திற்கு நன்றாக திட்ட தெரிந்தவரை, இந்த நிறுவனம் அனுப்புகிறது. அங்கு செல்லும் இந்த திட்டும் நபர், புகார் கொடுத்த நபரின் குறைகளை அடுக்குகிறார். இந்த சூழல் எவ்வளவு மோசமாக மாறினாலும், இவர்களுக்கென்று ஒரு விதிமுறை இருக்கிறது. அதை மீறாமல் அந்த முதலாளியும், திட்டும் நபரும் பேசிக்கொள்ளலாம்.
இந்த செயலி குறித்து கேள்விப்பட்ட சீன நாட்டினர், இது தங்கள் நாட்டிலும் தேவைப்படுவதாக இணையத்தில் கூறி வருகின்றனர். தங்களது முதலாளிகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறும் அவர்கள், இது ஒரு நல்ல முன்னெடுப்பு என்றும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவிலும் இது போல ஒரு செயலி வந்தால்…என்ன நடக்கும்?