பாரத ஸ்டேட் வங்கிக் கிளையின் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. இக்கிளைக்கு பாதுகாவலர் இல்லாததால், இங்கு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். முன்னதாக அந்த வங்கியின் அலாரத்துக்கான வயரை துண்டித்துள்ளனர். அதன் பின்னர், வங்கியில் இருந்த ஜன்னலின் கண்ணாடியை உடைத்து, இரும்பு சட்டத்தை அகற்றினர். அதன் பின்னர் அனைவரும் அந்த ஜன்னல் வழியாக வங்கிக்குள் சென்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் வயரை துண்டித்துள்ளனர். அதன் பின்னர், வங்கியில் இருந்த 3 லாக்கர்களில் ஒன்றை தங்களுடன் கொண்டு வந்த வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி எடுத்துள்ளனர்.
பின்னர், அதில் இருந்த 497 வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான ரூ.14.94 கோடி மதிப்புள்ள 19 கிலோ எடையிலான தங்க நகைகளை கொள்ளை அடித்து கொண்டு அதே ஜன்னல் வழியாக தப்பி விட்டனர். மேலும் ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்க கண்காணிப்பு கேமராக்களின் ‘ஹார்டு டிஸ்க்’கையும் கையோடு எடுத்து சென்று விட்டனர். வெல்டிங் இயந்திரத்தை மட்டும் வங்கியிலேயே கொள்ளையர்கள் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள் லாக்கர் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தங்களின் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து வாரங்கல் போலீஸாருக்கு வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வர்ந்தண்ண பேட்டை இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாஸ் ராவ் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தகவல் அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு கூடி தங்களின் நகைகளை திரும்ப கொடுக்கும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸாரும் வங்கி அதிகாரிகளும், அவர்களை சமாதானப்படுத்தினர். வாடிக்கையாளர்களின் நகைகள் விரைவில் திரும்ப கொடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக வாரங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.