Adani: ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்தாரா அதானி..! அமெரிக்க நீதிமன்றம் விசாரணை ஏன்? விரிவான தகவல்கள்!

அமெரிக்காவில், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததகவும் அதை மறைக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும் இந்திய தொழிலதிபர் அதானி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, 263 மில்லியன் டாலர்கள் அதாவது 2029 கோடி ரூபாய் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில மின்சார விநியோக நிர்வாகங்களுடனான சோலார் மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 2020ம் ஆண்டும் முதல் 2024ம் ஆண்டுவரை பெரும் தொகை இதற்காக கைமாற்றப்பட்டுள்ளது என்கிறது அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை.

Sagar Adani

இந்த சோலார் சக்தி ஒப்பந்தங்கள் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமாக லாபம் ஈட்ட முடியும் என்று முதலீட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

அதானி நிறுவனம் அமெரிக்க வங்கிகளிடம் இருந்தும் தொழிலதிபர்களிடம் இருந்தும் இந்த சட்டவிரோத செயல்களை மறைத்து முதலீடுகளைப் பெற்றுள்ளார் என்பதே அமெரிக்க வழக்குரைஞர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு.

இந்திய அதிகாரிகளுக்கே லஞ்சம் வழங்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதனால் அமெரிக்க சட்டத்தின்படி, இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் விசாரிக்க முடியும்.

அதானி லஞ்சம் வழங்கியதாக கூறப்படும் காலகட்டம் ஹிண்டன்பெர் நிறுவனம் அதானி மோசடி செய்ததாக அறிக்கை வெளியிட்ட அதே காலகட்டம்தான். அந்த அறிக்கை அதானியின் சந்தை மதிப்பில் 150 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க நீதிமன்றத்தில் முவைக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்க நீதிமன்றம் விசாரிக்கும் வழக்கு

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படுவது கௌதம் அதானி நிறுவனர் மற்றும் தலைவராக இருக்கும் ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனம்தான். இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இதன் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார் சாகர் அதானி.

இந்த நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை தலைமை தாங்குபவர்களாக அஸூர் பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர்கள் ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால் ஆகியோர் செயல்படுகின்றனர்.

அதானி – adani

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும் அதன் அமெரிக்க நிர்வாகிகளும் 12 ஜிகாவாட் சூரிய சக்தியை அரசுக்குச் சொந்தமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு (SECI) வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் SECI-ஆல் சோலார் மின்சாரம் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களை இந்தியாவில் பெற முடியவில்லை. இதனால் அதானி கிரீன் எனர்ஜியும் அஸூர் பவரும் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. எனினும் நஷ்டத்தை சந்திக்காமல் குறுக்கு வழியில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை அவர்கள் கையில் எடுத்ததாக கூறப்படுகிறது.

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மாநில மின்சார விநியோக நிறுவனங்களை, SECI உடன் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வற்புறுத்துவார்கள். இதற்காகவே சுமார் ரூ.2029 கோடி லஞ்சம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதில் ஆந்திரபிரதேச அதிகாரிகளுக்கே பெரும் பகுதி வழங்கப்பட்டதாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.

அதானி கிரீன் எனர்ஜி

லஞ்சத்தொகையை அமெரிக்க நிர்வாகிகளும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும் பாதி பாதி வழங்கியதாக அமெரிக்க குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. இவர்களின் திட்டப்படி மாநில மின் விநியோக நிறுவனங்கள் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.

குற்றப்பத்திரிகையில், சதியில் ஈடுபட்டவர்கள் லஞ்சம் வழங்கியதை மறைக்க கோட்-வேர்ட்களைப் (Code Word) பயன்படுத்தியது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதானியை “நியூமெரோ யூனோ” அல்லது “பிக் மேன்” எனக் குறிப்பிட்டு செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.

அமெரிக்க நிர்வாகியான அஸூர் பவரில் 2019 முதல் 2022 வரை ரஞ்சித் குப்தா சி.இ.ஓ-வாக இருந்தார். 2022-23 ஆண்டுகளில் ரூபேஷ் அகர்வால் பதவியேற்றிருந்தார். இந்த தலைமை மாற்றம் சில சிக்கல்களை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டுள்ள திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஊழியர்கள் சிலர் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

லஞ்சம் வழங்குவது குறித்து பல சந்திப்புகளை நடத்தியுள்ளனர். லஞ்சம் வழங்கியதில் கௌதம் அதானிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.