`அமரன்’ திரைப்படத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார் சென்னையை சேர்ந்த மாணவர் வாகீசன்.
அமரன் படத்தின் ஒரு காட்சியில் சாய் பல்லவி ஒரு காகிதத்தில் அவரின் தொலைப்பேசி எண்ணை எழுதி அதனை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். `அந்த காகிதத்தில் இருந்த எண் என்னுடையது. அந்த எண்ணை சாய் பல்லவியின் எண் என நினைத்துக் கொண்டு பலரும் என்னை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்கிறார்கள்’ என குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறார் வாகீசன்.
இதே போன்றொரு அனுபவம் இயக்குநர் வசந்த பாலனுக்கும் நேர்ந்திருக்கிறதாம். சண்டைக்கோழி படத்தின் ப்ரோமோஷன் யுக்தியால் தனக்கு ஏற்பட்ட இதுபோன்ற அனுபவம் பற்றி நகைச்சுவையாக பதிவிட்டிருக்கும் இயக்குநர் வசந்த பாலன், “ இயக்குநர் லிங்குசாமியால் எனக்கு அப்படியொரு சோதனை ஏற்பட்டது. சண்டக்கோழி திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக்காட்சியும் முதல் நாள் முதல் காட்சியும் பார்த்த நண்பர்கள் “சண்டக்கோழி திரைப்படம் பத்து ரன்!” என்று பாராட்டி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்.
நான் லிங்குவிற்கு படம் பார்த்த நண்பர்கள் இப்படி பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார்கள், மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். லிங்குவும் நன்றி தெரிவித்து பதிலிட்டான். அச்சமயத்தில் நான் மதுரையில் வெயில் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அன்று பரத், பாவனா சம்மந்தமான காட்சி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள ஜனநெருக்கடியான பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வேலைகளில் இறங்கியிருந்தேன்.
நானும் கேமராவும் மறைவான இடங்களில் இருந்து கொண்டு என் அலைபேசி வாயிலாக உதவியாளர்களுக்கும் பரத்திற்கும் உத்தரவுகள் தந்தவண்ணம் இருந்தேன். காலை 7 மணியிலிருந்தே சம்மந்த சம்மந்தமில்லாத எண்களிலிருந்து என்னை அழைத்து நீங்க தான் நடிகர் விஷாலா? இயக்குநர் லிங்குசாமியா? என்றும் இடைவிடாத போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.என் படப்பிடிப்பு வேலையவே செய்ய முடியாத வண்ணம் இடைவிடாத அழைப்புகள். ஏண்டா என் நம்பர்ல எல்லாரும் கூப்பிடுறீங்க என்று டென்சனில் ஒரு அழைப்பாளரிடம் கத்தி விட்டேன்.
தினத்தந்தி விளம்பரத்தில் உங்கள் நம்பர் போட்டுருக்கு சார் என்றார் ஒருவர். தினத்தந்தி வாங்கி பார்த்தால் சண்டக்கோழி திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பதிவிட்டு கீழே என் அலைபேசி நம்பரைப் போட்டிருந்தார்கள். கடுப்பாகி போனை அணைத்து விட்டெறிந்தேன்.
அன்று படப்பிடிப்பு முடிந்து இரவு லிங்குசாமியிடம் ஏண்டா இப்படி போட்டீங்க? என்றேன். படத்தைப் பற்றிய பாராட்டுகளை இப்படி புதிய விளம்பர உத்தி வாயிலாக விளம்பரம் செய்ய முயன்றோம் என்று பதிலுரைத்தான்.
மனதிற்குள் வெங்காய உத்தி என்று திட்டினேன். படம் மாபெரும் வெற்றி என்கிற மகிழ்ச்சியில் இருந்தான் எதற்கு இந்த நேரத்தில் என் சங்கடங்களை அவனிடம் பகிர வேண்டுமென அதைப் பற்றி பேசாமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு அலைபேசியை அணைத்தேன்.
நீண்ட இரவு முழுக்க நீங்க விஷாலா லிங்குசாமியா என்று தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வந்த வண்ணம் இருந்தது. அந்த நம்பரை மாற்றிய பிறகு தான் தப்பித்தேன். நாமும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே…டே நண்பா! குடும்பத்தோடு கேன்டில் லைட் டின்னர் தா !” என பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…