பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. நாளை (நவம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை) தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ஃபைனலுக்கு இந்திய அணி செல்வதற்கு மிக முக்கியமான தொடர். உண்மையில் இந்தியா நியூசிலாந்திடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பதற்கு முன்பு வரை, எளிதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்லும் சூழல்தான் இருந்தது.
ஆனால், அந்தத் தோல்விக்குப் பிறகு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, அந்த இடத்தை இரண்டாம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவுக்குத் தாரைவார்த்தது. அதோடு, பார்டர் கவாஸ்கர் தொடரை 4 – 0 அல்லது 5 – 0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே எளிதாக ஃபைனலுக்குச் செல்லலாம் என்ற இக்கட்டான சூழலையும் சொந்த செலவில் உருவாக்கிக் கொண்டது. ஒருவேளை, இந்தத் தொடரை மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவால் வெல்ல முடியவில்லையென்றால், கையில் நோட்டு பேனாவோடு மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைக் கணக்கிட்டு, பைனலுக்குச் செல்ல ஏதாவது வழி இருக்கிறதா என்று கணக்குப் போட வேண்டும். அவை என்னவென்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்…
* 4 (இ) – 1 (ஆஸி)
இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் தோற்றாலே மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல முடியும். அதில், இந்திய அணி 4 போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் தோல்வியடையும்பட்சத்தில், இங்கிலாந்து நியூசிலாந்துக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் டிரா செய்தாலோ அல்லது தென்னாப்பிரிக்காவுக்கெதிராக ஒரு போட்டியில் இலங்கையோ, பாகிஸ்தானோ டிரா செய்தாலோ மட்டும்தான், ஃபைனலுக்குச் செல்ல முடியும்
* 3 (இ) – 2 (ஆஸி)
இந்தியா 3 – 2 என்று இந்தத் தொடரை வெல்லும்பட்சத்தில், இந்திய அணி ஃபைனலுக்குச் செல்வதற்கு, நியூசிலாந்தை ஒரு போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவைக் குறைந்தது ஒரு போட்டியில் இலங்கையும் வீழ்த்துவதோடு, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தலா இரண்டு போட்டியில் இரண்டில் தென்னாப்பிரிக்கா தோற்க வேண்டும்.
* 2 (இ) – 2 (ஆஸி)
ஒருவேளை இந்தத் தொடர் 2 – 2 என சமனில் முடிந்தால், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவுக்கெதிராக ஒரு போட்டியில் இலங்கையும், இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியாவும் தோற்றால், இந்திய அணி ஃபைனலுக்குச் செல்லலாம்.
* 2 (இ) – 1 (ஆஸி)
மேலே குறிப்பிட்ட மூன்றில் எதுவும் நடக்காமல், 2 – 1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதாவது, இங்கிலாந்துக்கெதிரான தொடரில் நியூசிலாந்து ஒரு போட்டியில் வெற்றிபெற்று, ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும். மேலும், இலங்கை தென்னாப்பிரிக்காவிடம் இரண்டு போட்டியில் தோற்று, ஆஸ்திரேலியாவிடம் இரண்டு போட்டியில் வெற்றிபெற வேண்டும். இது நடந்தால்தான் இந்திய அணியால் ஃபைனலுக்குச் செல்ல முடியும்.
* இவையெதுவுமே நடக்காமல், இந்தத் தொடரில் ஒரேயொரு டெஸ்டில் மட்டுமே இந்திய அணி வெற்றிபெறுகிறது எனில், யாருடைய வெற்றி, தோல்வியையும் கணக்கு செய்யாமல் நேராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27க்குத் தயாராகலாம்.
மறுபக்கம், இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் (நவம்பர் 27 – டிசம்பர் 9), இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் 3 போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் (நவம்பர் 28 – டிசம்பர் 18), பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் 2 போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் (டிசம்பர் 26 – ஜனவரி 7), ஆஸ்திரேலிய அணி இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் (ஜனவரி 29 – பிப்ரவரி 10) விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர்களுக்குப் பிறகு நடைபெறும் டெஸ்ட் போட்டிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.