இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாகக் கணிக்கப்படும் இளம் வீரர்களில் முக்கியமானவர் 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐ.பி.எல்லில் கடந்த 2020-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமாகி அடுத்தடுத்த சீசன்களில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த இரு சீசன்களில் ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி தலா ஒரு சதம் அடித்திருக்கிறார்.
2020-ல் ராஜஸ்தானால் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெய்ஸ்வால், இன்று அதே ராஜஸ்தானில் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு இணையாக ரூ. 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறார். ஐ.பி.எல் போல சர்வதேச கிரிக்கெட்டிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தி வருகிறார். 2023-ல் வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால், தனது முதல் தொடரிலேயே 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்துடன் 266 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த ஆண்டில், 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,119 ரன்கள் குவித்திருக்கிறார். தற்போது, டெஸ்ட் அணியில் இந்தியாவில் பிரதான ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்திருக்கிறார்.
தற்போது, முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடச் சென்றிருக்கும் ஜெய்ஸ்வால், இன்னும் இரண்டு சிக்ஸ் அடிப்பதன் மூலம் நியூசிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர் பிரண்டன் மெக்கல்லமின் உலக சாதனையை முறியடிக்கவிருக்கிறார். அதாவது, டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் மெக்கல்லம் தான் முதலிடத்தில் இருக்கிறார். 2014-ல் இவர் அடித்த 33 சிக்ஸர்களே இன்றுவரை சாதனையாக இருக்கிறது.
இவ்வாறிருக்க, இந்த ஆண்டில் ஏற்கெனவே 32 சிக்ஸர்களை விளாசியிருக்கும் ஜெய்ஸ்வாலுக்கு, இந்த ஆண்டில் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி இருக்கிறது. நாளை பெர்த் மைதானத்தில் தொடங்கும் இந்தப் போட்டியில், 2 இரண்டு சிக்ஸர்கள் விளாசி உலக சாதனைப் படைக்க ஜெய்ஸ்வாலுக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 219 ரன்கள் குவித்தால், இந்த ஆண்டில் டெஸ்டில் அதிக ரன்கள் விளாசியிருக்கும் ஜோ ரூட்டை (1,338) பின்னுக்குத் தள்ளி முதலிடமும் பிடிக்கலாம்.