அதானியிடம் ஒடிசா அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறுவது பொய்: நவீன் பட்நாயக் கட்சி விளக்கம்

புவனேஷ்வர்: “மத்திய தொகுப்பிலிருந்து புதுபிக்கத்தக்க எரிசக்தியை பெறுவதற்கு ஒடிசா மாநில அரசு அதிகாரிகள், அதானி குழுமத்திம் இமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறுவது பொய்யானது, ஆதாரமற்றது” என்று பிஜு ஜனதா தளம் கட்சித் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் கடந்த 2000 முதல் 2024 ஜூன் வரை நவின் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில், லஞ்சப் புகார் குறித்து ஒடிசாவின் முன்னாள் எரிசக்தித் துறை அமைச்சரும், பிஜேடி எம்எல்ஏவுமான பி.கே.டெப் அளித்த பேட்டியில், “ஒடிசாவின் பெயரில் கூறப்படும் இந்த வகை குற்றச்சாட்டுகள் பொய்யானவை, அடிப்படை ஆதாரமற்றவை. ஒடிசா அரசு எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. அனைத்து ஒப்பந்தங்களும் கிரிட்கோ, மின் விநியோக நிறுவனம் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு இடையே தான் இருந்தன. பிஎஸ்ஏ தொடர்பாக நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டாலும், இந்த விவகாரங்களில் மாநில அரசுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை.

மற்ற மாநிலங்கள் நேரடியாக தாங்களே மின்விநியோகத்தைச் செய்யும்போது ஒடிசாவில் மின் விநியோகம் தனியார் வசம் உள்ளது. இங்கு மின்சாரத்தை விநியோகிக்கும் பணியை டாடா பவர் மேற்கொள்கிறது. அதனால் ஒப்பந்தங்கள் அனைத்தும், அதானி, எஸ்இசிஐ, கிரிட்கோ மற்றும் விநியோக நிறுவனத்துக்கு இடையே மட்டுமே இருந்தன. மின்சாரம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் தன்னாட்சி அமைப்பான ஒடிசா மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் (OERC) அங்கீகரிக்கப்படுகின்றன. கிரிட்கோவும் பாதி தன்னாட்சி கொண்ட அமைப்பாகும். அதனால், ஒப்பந்தங்களில் மாநில அரசுக்கு எந்தவிதமான நேரடிப் பங்கும் இல்லை. எரிசக்தித் துறை அமைச்சர் அல்லது செயலரோ இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஈடுபடுவதில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய அளவில் 2-வது பெரிய பணக்காரரும், அதானி குழும நிறுவனங்களின் தலைவருமான கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.