உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நியூசிலாந்து மக்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை தனியாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று காலிஸ்தான் தீவிரவாதிகள் கோரி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் திரைமறைவில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘சீக்கியருக்கான நீதி’ (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு தடை விதித்தது. எஸ்எப்ஜே சார்பில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் காலிஸ்தான் தனி நாடு கோரி கடந்த 17-ம் தேதி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பேரணி நடத்தப்பட்டது. இதற்கு நியூசிலாந்து மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பேரணியின்போது, ஓர் இளைஞர் கையில் ஒலிபெருக்கியுடன் வந்து காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
“உங்களது மஞ்சள் கொடியை (காலிஸ்தான் கொடி) எங்கள் நாட்டில் ஏன் ஏந்த வேண்டும்? இங்கு நியூசிலாந்தின் தேசிய கொடி மட்டுமே பறக்க வேண்டும். உங்களது சொந்த நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள். நீங்கள் அந்நிய நாட்டில் கால் பதித்து உள்ளீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். நியூசிலாந்துக்காக எங்களது ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்து உள்ளனர். இந்த புண்ணிய பூமியில் உங்கள் கொடியை ஏந்தக் கூடாது. உங்களது கொள்கையை எங்கள் நாட்டில் எடுத்துரைக்கக்கூடாது. இவ்வாறு அந்த இளைஞர் எச்சரிக்கை விடுத்தார்.
காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக அவர் பேசிய வீடியோ நியூசிலாந்து முழுவதும் வைரலாக பரவி வருகிறது. ஒட்டுமொத்த நியூசிலாந்து மக்களும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
“நியூசிலாந்து அமைதியை விரும்பும் நாடு. இங்கு பிரிவினை, வன்முறையை தூண்டும் வகையில் பேரணி, பிரச்சாரம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தக்கூடாது” என்று நியூசிலாந்து மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய வம்சாவளியினர் கண்டனம்: காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 17-ம் தேதி இந்திய வம்சாவளியினர் திரளாக குவிந்தனர். இதில் பங்கேற்ற மணிஷ் என்பவர் கூறும்போது, “உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற கொள்கையை இந்தியர்கள் பின்பற்றுகின்றனர். ஆனால் காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பிரிவினை, வன்முறையை தூண்ட முயற்சி செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
நியூசிலாந்து- இந்தியா மத்திய கூட்டமைப்பு, ஒன்றிணைந்த குரல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காலிஸ்தான் ஆதரவாளர்களை கடுமையாக கண்டித்துள்ளன. இந்த அமைப்புகள் சார்பில் நியூசிலாந்து பிரதமர் மார்க் மிட்செல்லிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், “ஆக்லாந்து பேரணியின்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினர். இந்திய தேசிய கொடியை அவமதித்தனர். சாலை, தெருக்களில் கார்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து-இந்தியா மத்திய கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர பானா கூறும்போது, “எங்களது கோரிக்கை மனுவை பரிசீலிப்பதாக நியூசிலாந்து அரசு உறுதி உள்ளது.காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக நியூசிலாந்து காவல் துறை அமைச்சர் அடுத்த வாரத்தில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்த உள்ளார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படக்கூடும்” என்று தெரிவித்தார்.
நியூசிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்பட மாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.