ஒன் பை டூ

தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“ `சேக்கிழாரின் ராமாயணம்’ என்று சொன்ன தற்குறிக்கு, ஆலமரத்துக்கும் காளானுக்கும் வித்தியாசம் தெரியாததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அடிமையாக, ஒன்றிய பா.ஜ.க அரசுக்குச் சேவகம் செய்தவருக்கு, கரப்பான் பூச்சிபோல மேஜைக்கு அடியில் ஊர்ந்தவருக்கு, ஆரியத்தை, சனாதனத்தை எதிர்க்கும், சுயமரியாதையுடன் இருக்கும் நம்மைக் கண்டால் விஷக்காளான்கள் போலத்தான் தெரியும். எங்கள் இளம் தலைவரைச் சட்டமன்ற உறுப்பினராக்கியது மக்கள் என்பதை பழனிசாமி மறந்துவிட வேண்டாம். கட்சித் தொண்டர்கள் தொடங்கி பொதுஜனம் வரை துணை முதல்வரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இதையெல்லாம் கண்டு பழனிசாமிக்குப் பொறாமை தாங்க முடியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், இப்போது சொந்தக் கட்சிக்காரர்கள்கூட பழனிசாமியை மதிப்பதில்லை. அவர் சொல்வதை யாரும் கேட்பதில்லை. எப்போது வேண்டுமென்றாலும் அ.தி.மு.க உடைந்து சிதையவே வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் மறைக்க, தொடர்ந்து முதல்வரை, துணை முதல்வரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் பழனிசாமி. இன்னும் கொஞ்ச காலத்தில் பழனிசாமி மட்டுமல்ல… அவரால் அ.தி.மு.க-வே இருக்குமிடம் தெரியாமல் அழிந்துபோகும்!”

செ.கிருஷ்ணமுரளி

செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

“நியாயமான விமர்சனம்தான் இது. அ.தி.மு.க-வின் தொடக்ககால உறுப்பினர், கிளைச் செயலாளர், 1989-லேயே எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர், அமைச்சர் என்று படிப்படியாக உயர்ந்து முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகனாக மட்டும் இல்லாவிட்டால் உதயநிதியால், தி.மு.க-வில் ஒரு கிளைச் செயலாளர் ஆகியிருக்க முடியுமா… அரசியல் அறிவே இல்லாத உதயநிதிக்கு, உழைப்பால் உயர்ந்த எடப்பாடியாரை விமர்சனம் செய்ய என்ன தகுதி, தராதரம் இருக்கிறது? எழுதிக்கொடுத்ததையே தப்புத் தப்பாக வாசிக்கும் தற்குறி உதயநிதிக்கு, எடப்பாடியாருடன் அல்ல… முதலில் எங்கள் கிளைச் செயலாளருடன் விவாதம் செய்யத் திராணி இருக்கிறதா? ‘அரசியலுக்கு வர மாட்டார், பொறுப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, எப்படி ஸ்டாலினைத் தலைவராகவும் முதல்வராகவும் திணித்தார்களோ, அதேபோல உதயநிதியையும் கட்சியிலும் ஆட்சியிலும் திணித்திருக்கிறார்கள். இதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியம்கூட தி.மு.க-வில் யாருக்கும் இல்லாமல் போய்விட்டதுதான் வேதனை. உதயநிதி தங்கக்கூண்டில் வளர்க்கப்பட்ட கிளி. அது ஒரு தோல்வியைக்கூடத் தாங்கிக்கொள்ளாது என்பதை 2026-ல் பார்க்கத்தான் போகிறோம்!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.