ஒரே நோக்கத்துடன் உழைத்து, தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற  அர்ப்பணிப்போம்

-அரச சேவையில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டாமல் முன்னேற முடியாது

-புதிய மாற்றத்திற்கான விருப்பத்தின் காரணமாகவே அண்மைய தேர்தல் வரலாற்றில் அரச சேவையினால் அரசாங்கத்திற்கு சுமார் 80% ஆணையை வழங்கப்பட்டது

-அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் இருந்தாலும் மக்கள் சக்தி தான் பலமானது

-மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை

-பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி தெரிவிப்பு

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சராக இன்று (22) முற்பகல் கடமைகளைப் பொறுப்பேற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு அங்கிருந்த ஊழியர்களினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்காக புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் எத்தகைய சட்ட ஒழுங்குகள் இருந்தாலும் மக்களின் அதிகாரம் தான் பலமாக உள்ளது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது அவர்களின் எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்கின்றன என்றும் தெரிவித்தார்.இந்த மாற்றம் அவர்களினதும் எதிர்பார்ப்பு என்பது அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் அரச சேவையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சுமார் 80% ஆணை எடுத்துக்காட்டுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எனவே, தமது அரசாங்கத்திற்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனை நனவாக்க அரச ஊழியர்களின் ஆதரவு அவசியம் என்றார்.

அனைவரும் எதிர்பார்க்கும் இந்தப் புதிய மாற்றத்தில், அரச சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற முடியாது என்றும், வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பாய்ச்சலை ஏற்படுத்தியது அரச சேவைதான் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்தா, பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பாதுகாப்பு படை உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.