சென்னை: தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரைச்சாலை பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்படும் பாலத்தை மே மாதத்துக்குள்ளும் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், பெருநகர அலகின் மூலம் ரூ.50 கோடி மதிப்புக்கு மேல் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் குறித்து எ.வ.வேலு இன்று (நவ.22) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் பேசியது: “சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சாலை மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள், கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாயினை கடப்பதற்குத் தேவையான பாலங்கள், ரயில்வே கடவு பாலங்கள் தேவைப்படுகின்றன.
இவற்றில் சில பணிகள் நெடுஞ்சாலைத்துறையின் சென்னை பெருநகர அலகால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ. 50 கோடிக்கு மேல் மதிப்புள்ள 16 பணிகளின் மொத்த மதிப்பு ரூ.2375 கோடியாகும். இதில் 11 பணிகள் நில எடுப்பு பணிகளாகும். நில எடுப்பு பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளன. நில எடுப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால், பல்வேறு திட்டப் பணிகள் செயலாக்கத்துக்கு வந்து, சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும். எனவே, வருவாய்த்துறை மற்றும் நில எடுப்பு அலுவலர்கள் உதவியுடன் இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
இது தவிர பெருங்களத்தூர் ரயில்வே பாலப் பணியில் உள்ள மீதமுள்ள பணிகளை வனத்துறை, மின்வாரியத்தின் அனுமதிகளை பெற்று தொடங்க வேண்டும். தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலைப் பணிகள், கிழக்கு கடற்கரைச்சாலை அகலப்படுத்தும் பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், மத்திய கைலாஷ் சந்திப்பில் உள்ள பல்வழிச் சாலை மேம்பாலத்தை அடுத்தாண்டு மே மாதத்துக்குள்ளும், பாடி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தை அடுத்தாண்டு டிசம்பர் இறுதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப் பாலம் இன்னும் நிறைவு பெறவில்லை. இப்பணியை வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும். வேப்பம்பட்டு மற்றும் விக்கோ நகர் ரயில்வே மேம்பாலப் பணி, மடிப்பாக்கம் சுரங்கப் பாலம், கொட்டிவாக்கம் கிராமத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி போன்ற அனைத்துப் பணிகளும் உரிய காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.
மேலும், ஆய்வுக்கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் சிலரையும் பங்கேற்கச் செய்து, அவர்களின் கருத்துக்களையும் கேட்டு, பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், துறை செயலர் ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் ஆர்.செல்வதுரை, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) ஆர்.சந்திரசேகர், சென்னை பெருநகர அலகின் தலைமைப் பொறியாளர், எஸ்.ஜவஹர் முத்துராஜ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின், இயக்குநர், எம். சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றர்.