நீதி கிடைக்​காமல் எந்த குடிமக​னும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகு​மார் கருத்து

சென்னை: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி கிருஷ்ணகுமாருடன் நெருக்கமான பந்தத்தை கொண்டுள்ளதால் மரபை மீறி அவருக்கு வாழ்த்து கூறுவதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர்.

ஸ்ரீராம் பேசும்போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த 8 ஆண்டு காலத்தில் 28,248 பிரதான வழக்குகளை கிருஷ்ணகுமார் முடித்து வைத்துள்ளது பாராட்டுக்குரியது. கடின உழைப்பு, நேர்மை, உண்மை ஆகிய பண்புகளின் மூலம் தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்து தலைமை நீதிபதியாகி இருக்கிறார். தலைமை நீதிபதி நிவாரண நிதியை நீட்டித்து நீதிபதி கிருஷ்ணகுமார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்” என்றார்.

ஏற்புரையாற்றிய நீதிபதி கிருஷ்ணகுமார், “சென்னை உயர் நீதிமன்ற குடும்பத்தில் குழுவாக சாதித்ததை நினைத்து பெருமையுடன் விடை பெறுகிறேன். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் புதிய அத்தியாயம் சவால் நிறைந்தது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதித்துறையை மேம்படுத்த வேண்டும். நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். மாவட்ட நீதித்துறையில் 72 சதவீத நீதிபதிகள் பலத்தைக் கொண்டு 101 சதவீத வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்திலும் 111 சதவீத வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பிஎஸ்.ராமன் கூறும்போது, அழகான மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் நீதிபதி கிருஷ்ணகுமார், தனது ராஜாங்க திறமைகளை கொண்டு அந்த மாநிலத்தில் அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். நீதிபதி கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருப்பதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.