“பணி ஓய்வுபெற்றும் பல ஆண்டாக தொழிற்சங்க பொறுப்பு..!'' – மதுரை தொ.மு.ச-வுக்குள் கசமுசா..!

“ரிடையர்ட் ஆகி பல வருசமானாலும் யூனியன் பொறுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அடுத்தவருக்கு வழிவிடாமல் அட்டகாசம் செய்கிறார்கள்” என்று கொந்தளிக்கிறார்கள் அரசு போக்குவரத்துக் கழக திமுக தொழிற்சங்கத்தினர்.

தமிழகத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில் (LPF)  அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்கம் முக்கியமானதாகும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச-வில் கோஷ்டிபூசல் அதிகரித்து வரும் நிலையில் மதுரை மாவட்ட சங்கத்திலோ பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.

அரசு போக்குவரத்து கழகம்

அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தொ.மு.ச-வில் இன்னும் சில நாள்களில் தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில் தற்போதுள்ள மதுரை மண்டல பொதுச்செயலாளருக்கு எதிராக, தொ.மு.ச-வின் மாநில பொதுச்செயலாளர் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரைக்கும் தொழிலாளர்கள் சிலர் புகார் அனுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மண்டல தொ.மு.ச பொதுச்செயலாளர்

 மதுரை அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை உண்டுபண்ணியுள்ள  இந்த விவகாரம் குறித்து தொழிலாளர்களிடம் பேசினோம், “தொழிற்சங்க பதவியில் ஒருமுறை அல்லது இருமுறை  இருக்கலாம் தப்பில்லை, ஒருவேளை தொழிலாளர்களுக்கு பாடுபடக் கூடியவராக இருந்தால் மூன்றாவது முறையும் பதவியில் இருக்கலாம். ஆனால், சொந்த சங்கத்தின் தொழிலாளர்களுக்கு விரோதமாக இருந்துகொண்டு கட்சிக்கும் எந்த நன்மையும் செய்யாமல், தன்னை வளப்படுத்திக் கொள்வதில் மட்டும் ஆர்வம் காட்டிக்கொண்டு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மதுரை மண்டல தொ.மு.ச-வில் பொதுச்செயலாளராக உள்ளார் மேலூர் அல்போன்ஸ்.

மதுரை போக்குவரத்துக் கழக தொ.மு.ச அலுவலகம்

இதில் கொடுமை என்னவென்றால், 2015-ல் அவர் ஓய்வு பெற்றபின்பும் மீண்டும் அதே பதவிக்கு வந்தார். ‘இன்னொரு முறை இருந்துக்கிறேன்’ என்று எதிர்த்து யாரையும் போட்டியிட விடாமல் கன்வீன்ஸ் செய்து தொடர்ந்து பொறுப்பில் இருந்தவர். நான்காவது முறை போட்டியிட்டபோது  ‘இவ்வளவு காலம் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது பொறுப்பில் இருந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக வந்துள்ள நேரத்தில் ஒருமுறை பொறுப்பில் இருந்துகொள்கிறேன்’ என்று சென்டிமெண்டாக பேசி பொதுச்செயலாளர் பதவியை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்.

5-வது முறையும் பொறுப்புக்கு..

இந்த மாதம் 26-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுச்செயலாளர் பொறுப்புக்கு நான் மட்டும்தான் போட்டியிடுவேன் வேறு யாரும் எதிர்த்து மனுச்செய்யக் கூடாது என்று தொழிலாளர்களிடம் மிரட்டலாக சொல்லி 5-வது முறையும் அவரே பொறுப்புக்கு வர தயாராகி வருகிறார். அது மட்டுமின்றி கடசிவரை நான் தான் பொதுச்செயலாளர் என்றும் சொல்லி வருகிறார். இவர் தொ.மு.ச -வின் மாநில நிர்வாகிகளையும் கரெக்ட் செய்து வைத்துள்ளதால் இவருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள்.

அரசு போக்குவரத்து கழகம்

தன்னை எதிர்க்கும், கணக்கு வழக்குகளில் கேள்வி கேட்கும் தொ.மு.ச நிர்வாகிகளை துறை ரீதியாக வேறு இடங்களுக்கு தூக்கி அடிப்பது, உடல் நிலை சரியில்லை என்றால் கூட லீவு கொடுக்காமல் டூட்டி பார்க்கச் சொல்வது, கஷ்டமான ரூட்டில் ஓடும் பஸ்களில் ஏற்றி விடுவது என தன் அதிகாரத்தை காட்டுவதால் பெரும்பாலான தொழிலாளர்கள் இவரை எதிர்ப்பதில்லை.

கண்டக்டராக இருந்து ஓய்வுபெற்றவருக்கு வேறு வருமானம் இல்லாத நிலையில் பொதுச்செயலாளர் பதவி மூலம் பெரிய அளவில் சம்பாதித்துள்ளார். சங்க வரவு செலவையெல்லாம் வெளிப்படையாக வைக்க மாட்டார். சங்க பயன்பாட்டுக்கு வாங்கிய காரை தன் சொந்த வாகனம் போல பயன்படுத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் வாகனத்துக்காக மட்டும் சங்க நிதி 12,60,000 ரூபாயை எடுத்து செலவழித்துள்ளார். அதுபோல் டூட்டி போட, தற்காலிக வேலை, டிரான்ஸ்பருக்கு என்று தொ.மு.ச தொழிலாளியிடமே பணம் கறந்துவிடுவார்… இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தேர்தல் ஆணையர் நியமிக்க வேண்டும்…

கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என்று கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி பேசி வரும் நிலையில், கட்சியின் முக்கிய சார்பு அணியான தொ.மு.ச-வில் இப்படிப்பட்டவர்கள் பதவியில் இருந்துகொண்டு அட்டகாசம் செய்தால் மற்றவர்கள் எப்படி பொறுப்புக்கு வருவது? அது மட்டுமின்றி இந்தமுறை தனக்கு எதிர்ப்பு இருப்பதை தெரிந்துகொண்டு பிற சங்கத்தினரை உறுப்பினராக சேர்க்கவும் திட்டமிட்டு வருகிறார். அதனால் அவர் போட்டியிடுவதை தடுக்க வேண்டும், அல்லது கட்சி தலைமையிலிருந்து தேர்தல் ஆணையர் நியமிக்க வேண்டும் என்று தெளிவாக விளக்கி முதலமைச்சருக்கும் கட்சியின் துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகத்துக்கும் புகார் அனுப்பியுள்ளோம், நடவடிக்கை எடுத்தால் மதுரை மண்டல தொ.மு.ச-வுக்கு நல்லது” என்றனர்.

மேலூர் அல்போன்ஸ்

தொ.மு.ச பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் விளக்கம்:

இக்குற்றச்சாட்டு குறித்து மதுரை மண்டல தொ.மு.ச பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்சிடம் கேட்டோம், “இது அனைத்தும் பொய்யான தகவல். சங்க விதிகளின்படி தொழிற்சங்க பொறுப்புக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஏன், நீங்கள் கூட போட்டியிடலாம். அதற்கு ஒரே தகுதி தொழிலாளர்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் அவ்வளவுதான். ஓய்வுபெற்றவர்கள் சங்கப்பணியில் ஈடுபடலாம். எனக்கு தொழிலாளர்களின் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து பொறுப்புக்கு வருகிறேன். மற்றபடி எந்த முறைகேடும் நடக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்க வேறு சங்கத்தினரையெல்லாம் தொ.மு.ச-வில் உடனே சேர்க்க முடியாது. சங்கத்தின் வரவு செலவு கணக்கெல்லாம் தெளிவாக உள்ளது. சங்க வாகனத்தை நான் பயன்படுத்துவதில் என்ன தப்பு? என்னைப் பற்றி தலைமைக்கு புகார் அனுப்பியது தெரியும். அவர்களிடம் நான் விளக்கம் சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று முழக்கமிடுகிற ஆளும்கட்சியின் தொழிற்சங்கத்திலேயே இவ்வளவு பிரச்சனையா?

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.