மும்பை: மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள உரத் தொழிற்சாலையில் உள்ள உலை ஒன்று வெடித்து விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிந்தனர், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன நிறுவனத்தில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து கடேகான் காவல்நிலையத்தின் மூத்த ஆய்வாளர் சங்ராம் ஷெவாலே கூறுகையில், “உரத் தொழிற்சாலையில் உள்ள உலை வெடித்ததில் ரசாயன புகை வெளியேறியது. இந்த வாயு கசிவு காரணமாக அந்த உலை இருந்த பிரிவில் வேலை செய்து வந்த 12 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் காவலாளி ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.
உர ஆலையில் இருந்து கசிந்தது அமோனியா வாயு என்று சந்தேகிக்கப்படுவதாக சாங்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வாயுகசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட 7 பேர் கராட்டில் உள்ள சாக்யாத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்று மற்றொரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்த பெண்கள் சாங்லி மாவட்டத்தின் யெட்கானைச் சேர்ந்த சுசிதா உத்லே (50), மற்றும் சத்ரா மாவட்டத்தின் மன்சரைச் சேர்ந்த ரெத்ரேகர்(26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.