மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த நிதி மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். அதில், நான் அரசு ஊழியராக இருந்தபோது, என்மீது வழக்கு தொடர் உரிய அனுமதி பெறவில்லை. அதனால் என் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் இதற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி குமார் ஓரி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர் அனுமதி பெறப்பட்டது என்றும், இது தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.