டெல்லி முதல்வராக பதவி வகித்த அர்விந்த் கேஜ்ரிவால், பிளாக்ஸ்டாப் சாலையில் 6-ம் இலக்கத்தில் உள்ள அரசு பங்களாவில் தங்கி இருந்தார். அப்போது, இந்த பங்களாவை பல கோடி செலவில் புதுப்பித்ததாகவும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது. மேலும் அதில் பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், முதல்வரின் அரசு இல்லத்தை புதுப்பித்தபோது ஆடம்பர பொருட்கள் வாங்கப்பட்டதைக் கண்டித்து பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அர்விந்த் கேஜ்ரிவால் இப்போது குடியிருக்கும் பிரோஸ் ஷா சாலையில் உள்ள வீட்டுக்கு அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பாஜக எம்.பி.க்கள், கட்சியின் டெல்லி மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.