ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால், மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 41 செ.மீ மழை பதிவானது. தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் . ராமநாதபுரம் நகர் தங்கப்பா நகர், பாத்திமா நகர், வசந்த நகர் மற்றும் பாம்பன், ராமே சுவரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், “தமிழக அரசு பேரிடர் மேலாண்மை மூலம் பல்வேறு அவசரகால பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறது. அதே போல ராமநாதபுரம் மாவட்டத்திலும் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வெளியேற போதுமான நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரத்தில் 30 இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்திருந்தது. தற்போது 8 இடங்களில் அதனை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார். இந்த ஆய்வின்போது ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எம்.பி. நவாஸ் கனி, எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.