நாணயம் விகடன் 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் பிசினஸ் என அத்தனை விஷயங்களையும் எளிமையாகவும் சரியாகவும் தந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமையைத் தலைமேற்கொண்டு செயல்பட்டு வருகிறது நாணயம் விகடன்.
பாரம்பர்ய முதலீடுகளை மட்டுமே செய்து வந்த பலருக்கு பங்குச் சந்தை பற்றியும், மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் தொடர்ந்து எடுத்துச் சொல்லி காலத்துக்கு ஏற்ப சரியான முதலீடுகளைத் தேர்வு செய்து தங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள உற்ற தோழனாக, சந்தை கடுமையாக இறங்கும்போது முதலீட்டாளர்கள் பதற்றம் அடையாமல் பார்த்துக்கொள்ளும் ஆலோசகராக, இலக்கு நோக்கிய முதலீட்டுப் பயணத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க கண்டிப்பான ஆசிரியராக நாணயம் விகடன் இருந்துவருகிறது. அதுமட்டுமல்லாமல், சந்தையில் புதிது புதிதாக முளைக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தி, மக்களைப் பாதுகாப்பதிலும் சிரத்தையுடன் செயல்பட்டுவருகிறது.
எப்போதுமே வாசகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இதழைத் தயார் செய்வதுதான் நாணயம் விகடனின் ஸ்பெஷல். அந்தவகையில், நீங்கள் கொடுத்த அத்தனை யோசனைகளையும் ஆராய்ந்து, தொகுத்து அவற்றிலிருந்து புதிய தொடர்களையும் கட்டுரைகளையும் திட்டமிட்டு இந்த சிறப்பிதழை உருவாக்கியிருக்கிறோம்.
பெரும்பாலானோர்கள் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ’ பகுதியைக் கேட்டிருந்தீர்கள். உங்களுக்காக மீண்டும் அந்தப் பகுதி கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறையுடன், இந்த சிறப்பிதழிலிருந்தே ஆரம்பமாகிறது. அதேபோல் மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீட்டாளர்கள் பின்பற்றி வருமானம் பார்க்கும் வகையில் ‘மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ’ வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள். அதுவும், இந்த சிறப்பிதழிலிருந்தே தொடங்குகிறது, ‘டபுள் டமாக்கா’வாக..!
‘6-லிருந்து 60 வரை’ என்ற தொடரின் மூலம் ஒவ்வொரு வயதிலும் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள் என்ன, அதை எப்படி திட்டமிட வேண்டும் என்பதையும் சொல்கிறோம். கூடவே, பண நிர்வாகத்தில் நாம் செய்யும் சிறிய மாற்றம் எப்படி நம் வாழ்க்கையை வளமாக்கும் என்பதைச் சொல்லும் ‘பண நிர்வாகத்தில் மாத்தி யோசி உத்திகள்’ என்ற தொடரும் உங்களுக்காக வருகிறது. சிறிய அளவில் செய்தாலும், வித்தியாசமான உத்திகள் மூலம் வெற்றிகரமாகத் தொழில் செய்பவர்களின் கதைகளை ‘சின்ன பிசினஸ்… சீக்ரெட் ஆஃப் சக்சஸ்’ என்ற தொடரில் இனி, நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள்.
உங்களின் நிதி வழிகாட்டியாக எப்போதும் துணை நிற்கும் நாணயம் விகடன், 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் வாசகர்கள், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள், கட்டுரையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் பல! இன்றுபோல் என்றென்றும் இணைந்திருப்போம்!
– ஆசிரியர்