ஏ. ஆர். ரஹ்மானுடனான 29 ஆண்டுக்கால திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தது தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ரஹ்மானும் இது குறித்து, “நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த உடைந்த சாப்டரை நாங்கள் கடந்து செல்வதற்கு எங்களின் ப்ரைவசிக்கு மரியாதை கொடுக்கும் நண்பர்களின் அன்புக்கு நன்றி.” என்று தனது சமூக வலைதள பக்கம் மூலம் தெரிவித்திருந்தார். இருப்பினும், சிலர் ரஹ்மான் – சாய்ரா பிரிவு குறித்து வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தனர். ‘ரஹ்மான் – சாய்ரா’ இருவரின் தனிப்பட்ட விஷியம் குறித்து தவறான தகவல்களை விஷமாகப் பரப்பினர். மேலும், ரஹ்மானுடைய கிட்டாரிஸ்ட் ஒருவரும் அவருடைய கணவருடனான விவாகரத்தை அறிவித்ததைத் தொடர்புப்படுத்தி விஷமத்தனமான வதந்திகளைப் பரப்பினர். இது குறித்து ரஹ்மானின் ரசிகர்கள் வதந்திகளைக் கடுமையாகக் கண்டித்து, ரஹ்மானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
வதந்திகள் குறித்து ஏ. ஆர். ரஹ்மானின் மகன் அமீன், “இப்படியான பொய்யான செய்திகள் பரபப்படுவதைப் பார்க்கும்போது மனமுடைகிறது. என் தந்தையைப் பற்றிய இந்த பொய்யான தகவல்கள் பரப்புவதை தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை நாம் போற்றிப் பாதுகாப்போம்.” என்று உருக்கமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மகுடி மகுடி’, ‘காரா ஆட்டக்காரா’, ‘சோக்காளி’, ‘தள்ளிப் போகாதே’ உள்ளிட்ட பாடல்களைப் பாடிய தமிழ் ராப் பாடகரான ஏடிகே (ஆரியன் தினேஷ் கனகரத்னம்), ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஏடிகே, “ரஹ்மான் சார் ஒரு ஏஞ்சல், கடவுளின் குழந்தை. ரஹ்மான் சார் என் வாழ்வில் எனக்கும், என் குடும்பத்திற்கும் நிறைய நல்ல உதவிகளைச் செய்திருக்கிறார். நான் இன்று நல்லபடியாக இருப்பதற்கு அவர் முக்கியக் காரணம். என்னுடைய விவாகரத்து சம்பவத்தால் நான் மனம் உடைந்து இருந்தபோது, ரஹ்மான் சார் என்னிடம் ஆறுதலாகப் பேசி, நிறைய அறிவுரைகளை வழங்கினார். அந்த சமயத்தில் திருக்குர் ஆன் வசனங்களை எனக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
என் வாழ்வில் என் வளர்ச்சிக்கும், எனக்கும், உதவியாக, உறுதுணையாக இருந்த ரஹ்மான் சார் குறித்து தவறான வதந்திகள் பரப்படுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் மெளனமாக இருக்க முடியவில்லை. இந்த கஷ்டமான சூழலில் கூட நான் அவருக்குத் துணையாக நின்று, அவருக்காகப் பேசவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.
இழிவான சோம்பிக்கள் பரப்பும் வதந்திகளை யாரும் நம்பாதீர்கள். தனிப்பட்ட லாபத்திற்காக அவர்கள் வதந்திகளைப் பரப்புகிறார்கள். இசையமைக்கும் நேரத்தில், இசைக் கச்சேரி சமயங்களில் நடக்கும் சின்ன சவுண்ட் டெஸ்ட் சத்தத்திற்குக் கூட தலையை அசைக்காமல், கவனம் சிதறாமல் தன் வேலையை பார்ப்பவர் ரஹ்மான் சார். மீதி நேரங்களில் எப்போதும் தன் பிள்ளைகளுடனும், சகோதரர்களுடனும் நேரம் செலவிடுபவர். இந்த வதந்திகள் எல்லாம் முற்றிலும் பொய்யானது என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
நான் எப்போதும் ரஹ்மான் சாருக்கு ஆதரவாகவே நிற்பேன். ரஹ்மான் சாரின் குடும்ப விஷயங்களைப் பற்றி தயவு செய்து யாரும் விவாதிக்க வேண்டாம்.
ரஹ்மான் சார் எப்போதும் அன்பின் பாதையைத் தேர்வு செய்பவர், வெறுப்பின் பாதையை அல்ல” என்று பதிவிட்டிருக்கிறார்.