தமிழக முதல்வர் மாவட்ட வாரியாக அரசின் திட்டங்கள் குறித்த செயல்பாடு தொடர்பாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னொரு திசையில் துணை முதல்வர் உதயநிதியும் மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் நவம்பர் 25-ம் தேதி கடலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், 28-ம் தேதி விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலினும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதையடுத்து, இவ்விரண்டு மாவட்டங்களிலும் உள்ள திமுக ஒன்றிய செயலாளர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. அமைச்சர்களாக, எம்பி, எம்எல்ஏ-க்களாக இருப்பவர்கள் எதையாவது புரட்டி எப்படியாவது தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அடிமட்டத்தில் இருக்கும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் தன் கையை ஊன்றி கர்ணம் பாய வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்கள். இதில் ஒரு சிலர் விதிவிலக்காக இருப்பது தனிக்கதை. இந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் அமைச்சர் சிவசங்கர் ஒரு முன்னெடுப்பைச் செய்திருக்கிறார்.
கடந்த 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்ட ஆய்வுப் பணிக்காக வந்த போது கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அப்போது அரியலூர் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் 13 பேரின் கட்சிப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ஜீப்களை பரிசளித்தார் ஸ்டாலின்.
இது கட்சித் தலைமையின் கிஃப்ட் எனச் சொல்லப்பட்டாலும் மாவட்டச் செயலாளரான அமைச்சர் சிவசங்கர், தேர்தல் சமயத்தில் ஒன்றிய செயலாளர்களை ‘தெம்பாக’ வைத்துக்கொள்வதற்காக செய்து கொடுத்த ‘சிறப்பு’ ஏற்பாடு இது என்கிறார்கள்.
இதுவரை எந்த மாவட்ட அமைச்சரும் ஒன்றிய செயலாளர்களுக்கு இப்படி தாராளம் காட்டவில்லை என்பதால் சிவசங்கரின் ‘சேவை’ இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் ஃபீவர் கணக்காய் பரவி இருக்கிறது. அதனால் முதல்வர் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்தால் நமக்கும் நிச்சயம் ‘கவனிப்பு’ இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஷயம் தெரிந்த ஒன்றியங்கள் வழிமேல் விழிவைத்து முதல்வருக்காக காத்திருக்கிறார்கள்.
28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர். இது பவர்ஃபுல் அமைச்சர் பொன்முடியின் கோட்டை. போதாதுக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அவரது மைந்தன் கவுதமசிகாமணி தான் இருக்கிறார். தெற்கு மாவட்டத்தில் 20 ஒன்றிய செயலாளர்கள் இருக்கிறார்கள்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருப்பதால் ஒன்றிய செயலாளர்களுக்கு எதுவும் பெயர வாய்ப்பில்லை. அதேசயம் தெற்கு மாவட்டத்தில் கவுதமசிகாமணி இருப்பதால் ஒன்றிய செயலாளர்கள், ‘இப்ப இல்லைன்னா எப்ப…’ என்று உற்சாகத் துள்ளலில் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக வெளிப்படையாக யாரும் பேசவில்லை என்ற போதிலும், கோலியனூர், காணை, விக்கிரவாண்டி ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், “நம்ம மாவட்டச் செயலாளர் செய்யுறதுக்கு என்ன…” என்று தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தைப் போல நம்ம மாவட்டத்திலும் ஒன்றிய செயலாளர்களுக்கு வாகனம் வழங்கும் வளமான திட்டம் ஏதும் இருக்கா என கவுதமசிகாமணியிடம் கேட்டதற்கு, “அதற்கெல்லாம் வாய்ப்பில்லீங்க. நம்ம மாவட்டம் மிகப் பெருசு. இங்க இருக்கிற ஒன்றியச் செயலாளர்கள் எதையும் எதிர்பார்க்காம மிகச் சிறப்பாவே செயல்படுறாங்க” என்றார்.