இக்கட்டான நிலையில் இந்திய அணி! 25ம் தேதி இறுதி முடிவு தெரியும்!

சென்னையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டியில் கத்தார் அணிக்கு எதிராக இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் கத்தார் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஆசிய கோப்பை கூடைப்பந்து (2025) தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி களைகட்டியது. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் சர்வதேச அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் இரண்டு போட்டிகளை கொண்ட இந்த சுற்றில் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் 76 வது இடத்தில் உள்ள இந்திய அணி 101 வது இடத்தில் உள்ள கத்தார் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக சமீபத்தில் உயிரிழந்த ஆசிய கூடைப்பந்து சங்கத்தின் செயலாளர் சோ ஹோக் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இந்திய அணியின் கேப்டனும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவருமான ஹஃபீஷ் அடுத்தடுத்து 3 கவுண்ட் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். ஹஃபீஷ் எடுக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். இருப்பினும் கத்தார் வீரர்கள் 2 கவுண்ட் அதிகம் எடுத்ததால் முதல் கால் பாதியில் 17-14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது கால்பாதியிலும் இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்தனர்.

Kudos to Team Qatar for their performance and well-earned victory!

To Team India, every great journey has its hurdles—use this as a stepping stone to bounce back stronger. The spirit of champions lies in rising after every fall. Onward and upward! pic.twitter.com/UJH4IDJonr

— #IndiaBasketball (@BFI_basketball) November 22, 2024

இரண்டாவது கால் பாதியிலும் கேப்டன் ஹஃபீஸ் மூன்று 3கவுண்ட் எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். கத்தார் அணியில் லிவிஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவிலும் கத்தார் அணி 36-31 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் கத்தார் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. கேப்டன் ஹஃபீஷை எதிரணி வீரர்கள் ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் அற்புதமாக தடுத்தனர். அதே வேளையில் புள்ளிகளையும் குவிக்க தவறவில்லை. இந்திய அணியில் மற்றொரு தமிழ்நாட்டு வீரரான பிரின்ஸ் ஒரு 2கவுண்ட்,ஒரு 3கவுண்ட் எடுத்துக்கொடுத்தும் கத்தார் எடுத்த புள்ளிகளை நம்மால் எட்டமுடியவில்லை. கத்தார் அணியில் லிவிஸ் மற்றும் ஹேரிஸ் ஆகியோர் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தனர்.

லிவிஸ் 19 புள்ளிகளையும், ஹேரிஸ் 17 புள்ளிகளையும் கைப்பற்றி அந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இந்திய அணியில் கேப்டன் ஹஃபீஸ் அதிகபட்சமாக 17 புள்ளிகளையும், பிரின்ஸ் 13 புள்ளிகளையும் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் ரீபவுண்ட் எடுப்பத்தில் கோட்டைவிட்டதால் நம்மால் அதிகபுள்ளிகளை குவிக்க முடியவில்லை. இறுதியில் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் கத்தார் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது. இந்திய அணி 25ம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிய கோப்பைக்கு தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.