எலான் எனும் எந்திரன் 4: `விண்வெளியும் என் வழியே..!’ | SPACE X

பேபலில் இருந்து வெளியேற்றப்படும் போதே, எலான் மஸ்குக்கு விண்வெளி மீதான காதல் அதிகரித்திருந்தது. 2001லேயே “மார்ஸ் சொசைட்டி” உடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் செடி கொடிகள் வளர்வதற்கான செயற்கை அறைகளை நிறுவத் திட்டமிட்டார்.

விண்வெளி காதலில் வெற்றி பெற, என்பிஓ லவோஸ்கின், காஸ்மோட்ராஸ் போன்ற ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் Dnepr ரக பெலாஸ்டிக் ஏவுகணையை வாங்க முயற்சித்தார். பலனளிக்கவில்லை.

இவர்களிடம் ராக்கெட் வாங்கப் போராடுவதை விட, தானே சொந்தமாக மலிவு விலை ராக்கெட்டை தயாரித்துக் கொள்ளலாமென அமெரிக்கா திரும்பிவிட்டார். அதன் விளைவாக உருவானது தான் ஸ்பேஸ் எக்ஸ்.

சொந்தமாக மலிவு விலை ராக்கெட் தயாரிப்பா…? இந்த யோசனையை உலகத்துக்குச் சொன்ன போது,

“இவர் பைத்தியமா”

“நாசா, இஸ்ரோ போன்ற அதிபுத்திசாலிகள் இணைந்து வேலை செய்யும் நிறுவனங்கள் கண்டுபிடிக்க முடியாததை எலான் கண்டுபிடிப்பாரா?”

“மலிவு விலைச் சேவை என்றால் இது என்ன பீட்சா கம்பெனியா?”

“காசிருக்கும் கொழுப்பில் இல்லாத ஊருக்குப் போக வழி தேடுகிறார்” என கடுமையாக விமர்சிக்கப்பட்டார்..

தன்னிடம் இருக்கும் பணத்தில், இத்தனை பிரமாண்ட திட்டங்களைச் செயல்படுத்த முடியாதென்பதைக் கணித்திருந்த எலான் மஸ்க், தொடர்ந்து நாசாவோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.

வேறு எதற்கு…? இந்தத் திட்டம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால் உங்களுக்குத் தான் லாபம், என் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் என பணத்தை வாங்குவதற்குத் தான்.

எலானின் கணக்கைச் சரிபார்த்த நாசா, நீ…ண்…ட ஆலோசனைக்குப் பிறகு, 2006ஆம் ஆண்டு Commercial Orbital Transportation Services (COTS) திட்டத்தின் கீழ் ~$278 மில்லியன் டாலர் ஒதுக்கியது. நாசா கேட்கும் தரத்தில் ஃபால்கன் 9 ராக்கெட் & டிராகன் ஸ்பேஸ்கிராஃப்டை உற்பத்தி செய்து தர வேண்டும் என்பதே டீல். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பொருட்களை அனுப்பும் Commercial Resupply Services (CRS) சேவைக்கு $396 மில்லியன் ஒப்பந்தத்தையும் பெற்றது ஸ்பேஸ் எக்ஸ். 2006 – 2008 வரை ஸ்பேஸ் எக்ஸுக்கு தொடர் தோல்வி, சொதப்பலோ சொதப்பல்.

ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கும் போது ராஜா போல சுமார் 176 மில்லியன் வைத்திருந்த எலான் மஸ்க், பல்வேறு தோல்விகள், டெஸ்லா உட்பட பல்வேறு திட்டங்களை ஸ்பேஸ் எக்ஸ் திட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே மேற்கொண்டதால், காசு காற்று போல காணாமல் போனது.

2008ன் பிற்பகுதியில், கடைசியாக கையில் இருந்த 30 மில்லியன் அமெரிக்க டாலரை பிரித்து, கொஞ்சம் ஸ்பேஸ் எக்ஸிலும், டெஸ்லாவிலும் முதலீடு செய்துவிட்டு தன் வெற்றிக்காக காத்திருந்தார்.

2008 செப்டம்பரில் ஃபால்கன் 1 நான்காவது முயற்சியில் தன் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. அதைப் பார்த்து, சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களை பூமியிலிருந்து கொண்டு சென்று கொடுக்கும் ~$1.6 பில்லியன் மதிப்பிலான Commercial Resupply Services (CRS) ஒப்பந்தத்தை, 2008 டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸுக்கு வழங்கியது நாசா. எலான் முகத்தில் புன்னகை பூத்தது. கம்பெனி பிழைத்தது.

2014-க்கு முன்பு வரை, அமெரிக்க ராணுவத்தின் பல செயற்கைக் கோள்களை ஏவ, யுனைடெட் லான்ச் அலையன்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தைத் தான் அதிகம் சார்ந்திருந்தது அமெரிக்கா. காரணம் இத்துறையில் போட்டி நிறுவனங்கள் பெரிதாக இல்லை. ஆனால் ஸ்பேஸ் எக்ஸின் வருகைக்குப் பிறகு, 2014 செப்டம்பரில் நாசா உட்பட, பல அரசு & தனியார் நிறுவனங்கள் தங்கள் செயற்கைக் கோள்களை ஏவ, ஸ்பேஸ் எக்ஸின் உதவியை நாடத் தொடங்கின.

சுருக்கமாக 2010களில், ஸ்பேஸ் எக்ஸ் கிட்டத்தட்ட நாசா & அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பல விண்வெளி சேவைகளைச் செய்து கொடுக்கும் செல்ல நிறுவனமாக உருவெடுத்தது.

ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கியதிலிருந்து, இதுவரை, கிட்டத்தட்ட $20 பில்லியன் அளவிலான ஒப்பந்தங்களை நாசா & அமெரிக்க பாதுகாப்புத் துறை போன்ற அமெரிக்க அமைப்புகள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸுக்கு வழங்கியுள்ளதாக சிஎன்என் தன் வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு பொருள் வெற்றிகரமாக வியாபாரமாகிறது என்றால் அதை எந்த நிறுவனமும் எளிதில் கைவிடாது. உதாரணத்துக்கு Pepsodent டூத் பேஸ்ட். 1915ல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட டூத் பேஸ்ட் இன்று வரை பல கை மாறினாலும், அந்த பேஸ்டை நாம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

அப்படி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என பஞ்சப்பாட்டு பாடாமல், 2010களின் தொடக்கத்திலேயே, அதிரடியாக ஃபால்கன் 1 ராக்கெட்டை கைவிட்டார் எலான். ஃபால்கன் 1-ஐ விட அதிக எடையை சுமந்து செல்லும் ஃபால்கன் 5 மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஃபால்கன் 9 ராக்கெட் & லான்ச் வெஹிகல்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் களமிறக்கினார்.

காசு பத்தாதே…

விண்வெளி போன்ற காஸ்ட்லி பிசினசில் வெறும் நாசா & அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஒப்பந்தங்களை மட்டும் வைத்து சமாளிக்க முடியாததால், அவ்வப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகளை பல்வேறு வெஞ்சர் கேப்பிடல் & முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்று ஃபண்டிங் திரட்டுவார் எலான் மஸ்க்.

அப்படி, 2015 காலகட்டத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கூடுதலாக நிதி தேவைப்பட்ட போது, தங்கள் நிறுவனத்தில் 8.33% பங்குகளை கூகுள் & ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் விற்று $1 பில்லியனைத் திரட்டியது ஸ்பேஸ் எக்ஸ்.

இன்றைய தேதிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு அடுத்த சுற்றுக்கான முதலீட்டில் $250 பில்லியனாக மதிப்பிடப்படலாம் என ராய்டர்ஸ் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு நிறுவனம் $1 பில்லியன் மதிப்பைத் தொட்டாலே கொண்டாடும், கூத்தாடும். யுனிகார்ன் என மார்தட்டிக் கொள்ளும். ஆனால் எலான் அதைச் செய்யவில்லை. காரணம் இந்த வெற்றி போதை, அவருக்குப் போதவில்லை.

சரி, ஸ்பேஸ் எக்ஸ் அப்படி என்ன தான் பெரிதாக சாதித்துவிட்டது. என்ன பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திவிட்டது..?

நம்பி நாராயணன் அவர்களின் ராக்கெட்டரி படம் நினைவிருக்கிறதா… இந்தியா விகாஸ் இன்ஜினை கண்டுபிடித்ததற்கே அத்தனை பெருமைபட்டுக் கொண்டோம். நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் தான்.

ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் 2002ல் இருந்து மெர்லின் Merlin (LOX/RP1 – Gas Generator), Kestrel (LOX / RP1 Pressure Fed Engine), Raptor (LOX/CH4 – Full Flow Staged Combustion), Draco (NTO/MMH Space Capsule Engine), Super Draco என பல வகை பூஸ்டர், ஸ்டேஜ் 2, கேப்சியூல் இன்ஜின்களைக் கண்டுபிடித்துள்ளது.

ஃபால்கன் 1 – ஃபால்கன் 5 – ஃபால்கன் 9 – ஸ்டார்ஷிப் போன்ற மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான லான்ச் வெஹிகல் (ராக்கெட்கள் & பூஸ்டர்கள்), மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான டிராகன் கார்கோ ஸ்பேஸ்கிராஃப்ட், கடலில் கூட ராக்கெட்டுகள் தரையிறங்கும் வகையிலான தளம் என கடந்த 15 ஆண்டுகளில் எந்த ஒரு விண்வெளி அமைப்புகளும் நிறுவனங்களும் செய்யாத பல சாதனைகளைச் செய்திருக்கிறது, செய்து கொண்டிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ்.

“For every action, there is an equal and opposite reaction” இது தான் நியூட்டனின் மூன்றாவது இயக்க விதி. விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டை மீண்டும் தரையிறக்கி பயன்படுத்த முடியாது, என விஞ்ஞானிகள் பலர் சொல்வதை எல்லாம் காதில் போட்டுக் கொள்லாமல், நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியை மெகா சைஸில் மெய்பித்துக் காட்டியவர் எலான் மஸ்க்.

OTRAG என்கிற ஜெர்மன் நிறுவனம் கடந்த 1975லேயே தனியார் விண்வெளி நிறுவனமாக பதிவு செய்து செயல்பட்டு வந்தது. இப்படி பல நிறுவனங்கள் களத்துக்கு வந்தாலும், விண்வெளித் துறையையே தலைகீழாக மாற்றவில்லை. ஆனால் எலான் மஸ்க் எல்லா வியாபாரத்துக்கும் அடிப்படையான ஒரு விஷயத்தை பிரமாதமாக மாற்றினார். மாற்றிக் கொண்டிருக்கிறார். அதன் பெயர் விலை (Cost).

ஸ்பேஸ் எக்ஸ் வருவதற்கு முன், ஒரு கிலோ பே லோடை, பூமியின் தாழ் சுற்றுவட்டப் பாதைக்குக் (Low Earth Orbit) கொண்டு செல்ல சுமார் $50,000 ஆனது என்றால், இப்போது ஸ்பேஸ் எக்ஸ் அதை $5,000 ஆகக் குறைத்துள்ளது என தி எகனாமிக் டைம்ஸ் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இன்று உலகின் ஒட்டுமொத்த விண்வெளிச் சந்தையில் 45 சதவீதத்தை, தன் வாலட்டில் மடக்கி வைத்திருக்கிறார் எலான் மஸ்க்.

சர்வதேச விண்வெளி மையத்திற்குத் தேவையான சரக்குகளை பூமியிலிருந்து கொண்டு சென்று சேர்ப்பது, நாசா, இஸ்ரோ உட்பட பல நாட்டின் செயற்கைக் கோள்களை விண்வெளியில் குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது, அமெரிக்க பாதுகாப்புத் துறை உட்பட அரசு அமைப்புகளின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவது, விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு பத்திரமாக தன் விண்களம் மூலம் அழைத்துச் செல்வது… என நாசா, இஸ்ரோ போல அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டிய பல முக்கியப் பணிகளை தனியார் நிறுவனமாக இருந்து செய்து வருகிறது அல்லது அதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ்.

மற்றவர்களுக்கு விண்வெளியில் இத்தனை வேலை பார்க்கும் எலான் மஸ்க், கொஞ்சம் தனக்காகவும் விண்வெளியில் ஒரு வேலையைப் பார்த்தார். அந்த வேலையால் இப்போது முகேஷ் அம்பானியோடு மும்முரமாக மோதப் போகிறார் எலான் மஸ்க்…!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.