பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பட்டியலின பெண்ணை கொலை செய்த வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமக்கூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் ஹொன்னம்மா (45). பட்டியலினத்தை சேர்ந்த இவர், கடந்த 2010-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட் டார். 27 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் அந்தப் பெண்மணியின் உடல் சாக்கடையில் வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து துமக்கூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர். அப்போது ஹொன்னம்மா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதால் அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கோபமடைந்தனர். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீடு புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஹொன்னம்மா போலீஸில் புகார் அளித்ததால் ஆதிக்க சாதியினர் கோபமடைந்தனர். சம்பவத்தன்று இரவு அவரை 25-க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினர் கல்லால் துரத்தி துரத்தி அடித்து கொன்றனர்.
பின்னர் அவரது உடலை சாக்கடையில் தூக்கி எறிந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல், ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்ட 3 போலீஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், துமக்கூரு மாவட்ட 3-வது அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகி ரெட்டி, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாத். மஞ்சுளா, திம்மராஜு, ராஜு, ஸ்ரீனிவாஸ், ஆனந்தசுவாமி. வெங்கடசுவாமி, வெங்கடேஷ், நாகராஜு, ராஜப்பா, ஹனுமந்தையா, கங்காதர் உள்ளிட்ட 21 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.13,500 அபராதம் விதித்தார். இந்த வழக்கின் விசாரணையின் போதே 6 குற்றவாளிகள் உயிரிழந்தனர். இதனால் எஞ்சிய 15 பேரும் துமக்கூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.