சூடுபிடிக்கும் மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் – ‘டபுள் கேம்’ ஆடுவது தமிழக அரசா, மத்திய அரசா?

புதிய சுரங்கம்!

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை ஒட்டி புதிதாக டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் வெளியானதும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடங்கி சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இந்த திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சுரங்கம் அமைக்கும் முடிவினை உடனடியாக கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். உண்மையில் இந்த விவகாரத்தில் நடப்பது என்ன. இந்த சுரங்கம் அமைப்பதில் தமிழக, மத்திய அரசின் பங்குகள் என்ன என்பது குறித்து விரிவாக விசாரித்தோம்.

புகார் தெரிவித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, ஆகிய பகுதிகள் இருக்கிறது. இந்த பகுதிகளில் உள்ள 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த மாதம் ஏலம் நடத்தியிருக்கிறது. இதில் ஒரு பகுதியில் சுரங்கம் அமைக்கும் ஏலத்தைத் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

தங்கள் பகுதியில் சுரங்கம் அமைவதை எதிர்த்து அந்த பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறார்கள்.

மதுரை எம்.பி எதிர்ப்பு!

இந்த விவகாரம் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில், “அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய அழகர்மலைக்கு அருகே 2015.51 எக்டரில் (சுமார் 5 ஆயிரம் ஏக்கர்) டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4-வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தமிழகத்தின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது.

சு.வெங்கடேசன்

பெருமாள் மலை இச்சுரங்கத் தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளைத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீராதாரப் பகுதியாகச் செயல்படுகிறது. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டியலிட்டு அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு.

கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.15 எக்டர் பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கியுள்ளது. மத்திய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இத்திட்டத்துக்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

மறுத்த தமிழக அரசு!

நவம்பர் முதல் வாரத்தில் ஏலம் நடந்து முடிந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிராம மக்கள் கனிம சுரங்கம் அமைப்பதற்குத் தமிழக அரசு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தனர். அதோடு, சுரங்கம் அமைப்பதை எதிர்த்து பல்வேறு கிராம மக்கள் ஒன்றுகூடி போராட்டமும் நடத்தினார்கள். நாளுக்கு நாள் மக்களின் போராட்டத்துடன் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து சுரங்கம் அமைப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

தமிழக அரசு

இதுகுறித்து தமிழக அரசு சார்பில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டிகிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, நவம்பர் ஏழாம் தேதி இந்துஸ்​தான் ஜிங்க் லிமிடெட் நிறு​வனம் தகுதியான நிறு​வனமாக சுரங்க அமைச்​சகத்​தால் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இது குறித்து அந்த நிறுவனத்திடமிருந்து தமிழக அரசுக்கு எந்த ஒரு விண்ணப்பமும் பெறப்படவில்லை. அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை” என்று கூறப்பட்டிருந்தது. அதேபோல, இதுகுறித்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, ” இதுவரை விண்ணப்பம் எதுவும் வரவில்லை. வந்தாலும் அதனைத் தமிழக அரசு நிராகரிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசைக் குறைசொல்வது தவறு!

தமிழக அரசு இதுவரை எவ்வித அனுமதியும் கொடுக்கவில்லை என்று அரசு தரப்பிலும், அமைச்சர் தரப்பிலும் பதில் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “முதலில் அங்குச் சுரங்கம் அமைய மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது என்று குறை சொல்வது தவறானது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் டங்ஸ்டன் கனிமம் கிடைக்கிறது என்று மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ளும். அப்படி மேற்கொள்ளப்படும் ஆய்வின் அப்படிப்பிடையில் கனிமங்கள் உள்ள இடங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிடும். அந்த பட்டியலில் எந்த மாநிலத்தில் என்ன இருக்கிறது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

நாராயணன் திருப்பதி

அதன்பின், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்தின் பொது ஏலம் நடைபெறும். நடந்தது ஒரு பொது ஏலம். இந்த ஏலத்தில் எந்த நிறுவனம் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். ஏலத்தை எடுத்த நிறுவனம் அந்த கனிமம் இருக்கும் இடம் அமைந்துள்ள மாநில அரசிடம் முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பிக்கவேண்டும். அங்குக் கனிம சுரங்கம் அமைய அனுமதி கொடுப்பதும், நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதும் அந்தந்த மாநில அரசின் தனிப்பட்ட விருப்பம். இதில் என்னவோ பாஜக அரசு திட்டமிட்டுச் செய்வதுபோல இங்குள்ளவர்கள் பேசுவது மிகவும் மோசமான செயல். இந்த விவகாரத்தில் பேசுபவர்கள் ஒன்று புரியாமல் பேசுகிறார்கள் அல்லது அரசியல் செய்கிறார்கள் என்பதைத் தாண்டி இதில் வேறொன்றும் இல்லை.” என்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PesalamVaanga

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.