புதுடெல்லி: “வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் பிரியங்கா காந்தி மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமையடைகிறேன்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது சகோதரியும், வயநாடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அவர் இவ்வாறு நெகிழந்துள்ளார்.
கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் பல எதிர்பார்ப்புகளை மீறி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் சகோதரியின் வெற்றி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி நெகிழ்ச்சி பதிவொன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் ராகுல், “வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் பிரியங்கா மீது வைத்துள்ள நம்பிக்கையால் நான் பெருமையடைகிறேன். எங்களின் பிரியத்துக்குரிய வயநாட்டை கலங்கரை விளக்கமாக மாற்ற அவர் (பிரியங்கா காந்தி) தைரியத்துடனும், ஆர்வத்துடனும், தளராத அர்ப்பணிப்புடனும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்துவார் என்பதை நான் அறிவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “இண்டியா கூட்டணிக்கு மிகப் பெரிய ஆணையை அளித்துள்ள ஜார்க்கண்ட் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வெற்றிக்கு பாடுபட்ட ஹேமந்த் சோரன், காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும். மாநிலத்தில் கூட்டணிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, அரசியல் சாசனத்துடன் நீர், காடு மற்றும் நிலத்தினை பாதுகாப்பதற்கு கிடைத்த வெற்றியாகும்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராத ஒன்று. அதனை நாங்கள் விரிவாக ஆராய்வோம். ஆதரவளித்த அனைத்து வாக்காளர் சகோதர சகோதரிகளுக்கும், வெற்றிக்காக அயராது உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.