மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே இருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராவாரா அல்லது தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஏக்நாத் ஷிண்டேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு,”மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலில் மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு இருக்கின்றன. எனவே முதல்வர் பதவி தொடர்பாக மூன்று கட்சிகளும் அமர்ந்து பேசி முடிவு செய்யப்படும்”என்று தெரிவித்தார். பா.ஜ.க சார்பாக முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இத்தேர்தல் முடிவு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில்,”பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் தான் இந்த வெற்றிக்கு காரணம் ஆகும். அனைவரும் ஒருவருக்கு கீழ் இருந்தால் பாதுகாப்பு என்ற பிரதமர் மோடியின் கோஷம் எடுபட்டு இருப்பதாக” தெரிவித்தார். யார் முதல்வர் என்று தேவேந்திர பட்னாவிஸிடம் கேட்டதற்கு,” முதல்வர் பதவி குறித்து அனைத்து கட்சிகளிடமும் கலந்து முடிவு செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.
யார் முதல்வர் என்பதில் எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் அமர்ந்து பேசி அது பற்றி முடிவு செய்வோம். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்”என்றார்.
தேர்தலுக்கு முன்பு பட்னாவிஸ் அளித்திருந்த பேட்டியில், “மகாவிகாஷ் அகாடி என்னை தங்களது சக்கர வியூகத்திற்குள் சிக்க வைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அது குறித்து இன்று அளித்த பேட்டியில், ”நான் நவீன அபிமன்யூ. சக்கர வியூகத்தை எப்படி உடைக்கவேண்டும் என்று எனக்கு தெரியும். நான் சக்கர வியூகத்தை உடைத்துவிட்டேன். தேர்தல் வெற்றிக்கு நான் சிறிய அளவில் பங்காற்றி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். ஏக்நாத் ஷிண்டேயை முன்னிலைப்படுத்தியே சட்டமன்ற தேர்தலை சந்தித்து இருப்பதால் ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் சிவசேனா(ஷிண்டே) தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஏற்கனவே 131 தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சில வேட்பாளர்கள் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களும் சேர்ந்தால் பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துவிடும். எனவே பா.ஜ.கவை சேர்ந்தவரே முதல்வராவார் என்று தெரிகிறது.
மும்பையில் இருக்கும் தேவேந்திர பட்னாவிஸுக்கு நாக்பூரில் உள்ள அவரது தாயார் சரிதா போன் செய்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து பட்னாவிஸ் தாயார் சரிதா கூறுகையில், ”நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகிவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவன் கடினமாக உழைக்கக்கூடியவன்” என்று தெரிவித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…