மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) மிக மோசமான தோல்வியைச் சந்தித்து உள்ளது.
மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1978-ல் மகாராஷ்டிர மாநில முதல்வரானவர் சரத் பவார். இதன்மூலம் மகாராஷ்டிராவின் இளம் முதல்வர் (38 வயதில் பதவி) என்ற பெருமையை அவர் பெற்றார்.
அதன் பிறகு 4 முறை மகாராஷ்டிர முதல்வர் பதவியை அலங்கரித்தார். அதுமட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் பதவிகளையும் வகித்தார். 1999-ல், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்ததன் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) தொடங்கினார் சரத் பவார்.
2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) இணைந்து மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். தொடர்ந்து யுபிஏ-வில் இருந்து வரும் சரத் பவாருக்கு, 2019-ல் மிகப்பெரிய அடி விழுந்தது. 2019-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வென்றது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ், சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் 2022-ல் சிவசேனா கட்சியை உடைத்து, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தார் ஏக்நாத் ஷிண்டே.
அதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டது. சரத் பவாரின் உறவினரான அஜித் பவார் கட்சியை உடைத்து வெளியேறி மகாயுதி என்ற கூட்டணியை ஏற்படுத்தி பாஜக, சிவசேனாவுடன் கூட்டணி வைத்து துணை முதல்வர் பதவியையும் அடைந்தார்.
இந்நிலையில்தான் அஜித் பவாரின் கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் ஆணையமும் தெரிவித்தது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) என இரு கட்சிகளாக மகாராஷ்டிராவில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, இந்த சட்டப் பேரவைத் தேர்தல், 83 வயதான சரத் பவாருக்கு மிகப்பெரிய நெருக்கடியாகப் பார்க்கப்பட்டது. தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் சரத் பவாருக்கு ஏற்ப்டடது.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சரத் பவார் தலைமையிலான என்சிபி கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது மகாராஷ்டிர அரசியலில் சரத் பவாருக்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 தேர்தலில் 54 இடங்களில் வென்ற சரத் பவார் கட்சி, தற்போது 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பெரும்பாலான தலைவர்கள், எம்எல்ஏக்களை அஜித் பவார் கைப்பற்றியுள்ளதால் இந்த நிலை சரத் பவாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சரத் பவாரின் எதிர்கால அரசியலை கேள்விக்குள்ளாக்கி உள்ளது 2024 சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் என்றால் அது மிகையல்ல.