புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் அமைதியை ஏற்படுத்துவதற்காக கூடுதலாக 10,000 வீரர்களை மத்திய அரசு அனுப்பவுள்ளது.
மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவரிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. மோதல் ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. குகி மற்றும் மைதேயி இனத்தை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 11-ம் தேதி 2 ஆண்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இதனால், மணிப்பூரின் ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறும்போது. துணை ராணுவத்தைச் சேர்ந்த 90 கம்பெனி வீரர்கள் (10,800 பேர்) கூடுதல் பாதுகாப்புக்காக இங்கு வரவுள்ளனர். பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காகவும், ரோந்து பணிக்காகவும் வீரர்கள் அனுப்பப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்