புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தால் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இங்கு வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் வென்றிருக்கிறது. ஒன்றுபட்டால், நாம் இன்னும் உயர்வோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக மகாராஷ்டிரா சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இந்த அன்பு ஈடு இணையற்றது. மகாராஷ்டிரா முன்னேற்றத்துக்காக நமது கூட்டணி தொடர்ந்து உழைக்கும் என நான் உறுதியளிக்கிறேன். ஜெய் மகாராஷ்டிரா. நமது நிர்வாக கொள்கையை மக்களிடம் விளக்கிய கட்சி தொண்டர்களுக்கு நன்றி. ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 230 ப்ளஸ் தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கிட்டத்தட்ட 50 தொகுதிகளை எட்டவே திணறியது.