Australia Team Worst Record | பெர்த் மைதானத்தில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமான வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி, அந்நாட்டு மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக எடுத்த மிக குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோராக பதிவாகியுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட வரலாற்று அவமானம் ஆகும். இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி நடக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகள் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். அதனால் கட்டாயம் டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி முதல் டெஸ்டில் களமிறங்கியிருக்கிறது. பெர்த் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய மோசமான பேட்டிங்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 150 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. நிதீஷ் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பந்த் 37 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இவர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் அவுட்டாகினர். கேஎல் ராகுல் சிறப்பாக ஆடினாலும் மூன்றாவது நடுவரின் சர்ச்சைக்குரிய அவுட் முடிவு காரணமாக வெளியேற நேரிட்டது. இந்தியாவின் பேட்டிங் சொதப்பியதால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு
அதன்படியே, கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் அபாரமாக பந்துவீசினர். இதனால் அந்த அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி தங்களுடைய சொந்த மண்ணில் எடுத்த மூன்றாவது மிக குறைந்த ஸ்கோராக பதிவானது. அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிராக எடுத்த மிக குறைந்த ஸ்கோராகவும் பதிவாகி மோசமான வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்திய அணியில், குறிப்பாக பும்ரா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 5 விக்கெட்டுகள் எடுப்பது 11வது முறையாகும். இதன் மூலம் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி வருகிறது.
2000-க்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர்
85 – vs தென்னாப்பிரிக்கா – ஹோபார்ட் (2016)
98 – எதிராக இங்கிலாந்து – மெல்போர்ன் (2010)
104 – எதிராக இந்தியா – பெர்த் (2024*)
127 – எதிராக பாகிஸ்தான் – சிட்னி (2010)
136 – எதிராக நியூசிலாந்து – ஹோபார்ட் (2011)