Jolly O Gymkhana Review: 'எப்பயாவது லாஜிக் இல்லனா ஓகே; எப்பவுமேவா?'- எப்படியிருக்கு ஜாலியோ ஜிம்கானா?

பவானி (மடோனா செபாஸ்டின்), அவரின் தாய் செல்லம்மா (அபிராமி), தங்கைகள் இரண்டு பேர், தாத்தா (ஒ.ஜி.மகேந்திரன்) ஆகியோர் சேர்ந்து ‘வெள்ளைக்காரன் பிரியாணி’ என்கிற பெயரில் கடன் வாங்கி, ஹோட்டல் தொடங்குகிறார்கள்.

அந்த ஹோட்டலுக்கு ஆர்டர் கொடுக்கும் எம்.எல்.ஏ அடைக்கல ராஜ் (மதுசூதன் ராவ்), அவர்களுக்குப் பணம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அதனால், சண்டை வர, பவானியின் குடும்பத்தையும், ஹோட்டலையும் அடித்துத் துவைக்கிறார் அடைக்கல ராஜ். ஏழைகளின் பெயரில் போலியான மருத்துவக் காப்பீடு அடுத்து, அதற்குப் போலியான மருத்துவச் சிகிச்சை பில்களை தயார் செய்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அதே அடைக்கல ராஜ் மீது, வழக்குத் தொடுக்கிறார் வழக்கறிஞர் பூங்குன்றன் (பிரபு தேவா).

Jolly O Gymkhana

இந்நிலையில், பூங்குன்றத்திடம் உதவி கேட்க, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறது பவானி குடும்பம். ஆனால், அங்கே அவர் இறந்து கிடக்கிறார். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, பூங்குன்றத்தின் பிணத்தோடு ஹோட்டலிலிருந்து தப்பிக்கிறார்கள். அவர்களோடு பிரச்னைகளும் துரத்த, இறுதியில் அவற்றைச் சமாளித்து, பிரச்னைகளிலிருந்து தப்பினார்களா? பூங்குன்றத்தைக் கொன்றது யார், குற்றவாளியான அடைக்கலம் ராஜ் தண்டிக்கப்பட்டாரா போன்ற கேள்விகளுக்கு நான்கு லோட் லாஜிக் ஓட்டைகளோடு பதில் சொல்லியிருக்கிறது சக்தி சிதம்பரத்தின் ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம். 

ஒரு நீதிமன்றக் காட்சிக்கும், இரண்டு பாட்டுக்கும் மட்டுமே உயிரோடிருக்கும் பிரபு தேவா, மற்ற காட்சிகளில் பிணமாகவே ‘வளைந்து நெளிந்திருக்கிறார்’. சில காட்சிகளில் பிணமாக அவர் செய்யும் உடல்மொழி (!) நையாண்டிகள் ஆறுதல் தருகின்றன. மற்றபடி பெரிய வேலையே இல்லை. மொத்த படத்தையும் பேசியே தாங்கியிருக்கிறார் மடோனா செபாஸ்டின். அவரின் பதற்றமும், டைமிங் காமெடியும் சில நொடிகளுக்கு மட்டும் கைகொடுக்க, மற்ற காட்சிகளில் அவரின் மிகை நடிப்பானது மீட்டர் பாக்ஸையே வெடிக்க வைக்கிறது.

Jolly O Gymkhana

அபிராமிக்கும் இதே வரிகள் பொருந்துமென்றாலும், கூடுதலாகச் சில நொடிகள் சிரிக்க வைக்கிறார். யோகி பாபு, ஜான் விஜய், ரோபோ சங்கர், சாய் தீனா, சக்தி சிதம்பரம் என எல்லா கதாபாத்திரங்களுமே ஓவர் டோஸிலேயே வந்து, பேசி, நடித்துப் போகின்றன. ஒ.ஜி.மகேந்திரன், மதுசூதன் ராவ் ஆகியோர் ஆறுதல். எம்.சி. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகளில் மட்டும் பசுமை பறக்கிறது. ராமரின் படத்தொகுப்பில் சில இடங்களில் சீரியல்தன்மை எட்டிப்பார்க்கிறது. அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் கைகொடுக்கவில்லை. அவரின் பின்னணி இசையும் மனதில் நிற்கவில்லை.

ஒரு சடலம், நான்கு பெண்கள், துரத்தும் பிரச்னைகள் என்ற ஒன்லைனை எடுத்துக்கொண்டு, ‘லாஜிக் பாக்காதீங்க, காமெடிய மட்டும் பாருங்க’ என்ற பொறுப்புத் துறப்போடு, 2 மணிநேரம் சிரிக்க வைக்கப் பெரு முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம். கலாட்டா குடும்பம், வகை வகையான வில்லன்கள், ஒரு பெரிய டாஸ்க், இறுதியில் ஒரு சோசியல் மெசேஜ் என ஒரு காமெடி படத்திற்குத் தேவையான கதையைப் படம் கொண்டிருந்தாலும், நம்பத்தன்மை இல்லாத திரைக்கதையாலும், அடுக்கடுக்கான பழங்காலத்து வார்த்தை காமெடிகளாலும் பார்வையாளர்களை நோகடித்திருக்கிறது படக்குழு.

Jolly O Gymkhana

எல்லா கதாபாத்திரங்களுமே ஒரே மாதிரி ஓவர் ஆக்டிங் செய்வது, பக்கம் பக்கமாகப் பேசிக்கொண்டே இருப்பது, ஒவ்வொரு வரிக்கும் மாற்றி மாற்றி கவுண்டர் கொடுத்து விளையாடுவது என மொத்த படமும் வசனங்களால் திணிக்கப்பட்டிருக்கிறது. பொம்மலாட்டத்தை இறுதிக்காட்சியோடு இணைத்த விதம், சாதியைப் பிடித்துத் தொங்கும் சில காவல்துறை அதிகாரிகள் என ஒரு சில ஐடியாக்களும், வெகு சில வசனங்களும் மட்டுமே கொஞ்சமாகச் சிரிப்பைத் தருகின்றன.    

மொத்தத்தில், லாஜிக்குமில்லாமல், ஜாலியுமில்லாமல் சுமாரான ஜிம்கானாவாக வந்திருக்கிறது இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’. 

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/JailMathilThigil

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.