2024 உயர்தர பரீட்சை நவம்பர் 25 நாளை ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சகல ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆணையாளர் இதனை குறிப்பிட்டார்.
இப்பரீட்சை டிசம்பர் 22 ஆம் திகதி வரை 22 நாட்கள் இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக 333,185 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 253,390 பாடசாலை பரீட்சாத்திகளும், 79,795 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இவ்விண்ணப்ப தாரிகளுக்காக நாடு முழுவதும் 2,312 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், வட பகுதியில் நெடுந்தீவு மற்றும் நைனாதீவு ஆகியவற்றை அண்மித்ததாக 02 மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பரீட்சை மத்திய நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக நாடு முழுவதும் 319 நிலையங்களும் 32 ஒழுங்குபடுத்தல் மத்திய நிலையங்களின் கீழ் நிறுவப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் சுட்டிக்காட்டினார்.