உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவேன் – குகேஷ் நம்பிக்கை

சிங்கப்பூர்,

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நாளை தொடங்கி அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென், இந்திய வீரர் குகேஷ் உடன் மோதுகிறார். 138 ஆண்டு கால இந்த போட்டி வரலாற்றில் ஆசிய வீரர்கள் இருவர் மோதுவது இதுவே முதல்முறையாகும். ரூ.21 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். இந்த போட்டியில் முதலில் 7½ புள்ளியை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து குகேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டி தொடரில் நான் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் சிறந்த நிலையில் செல்ல வேண்டியது அவசியமானதாகும். நான் நல்ல உத்வேகத்துடன் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டின் லிரென் பார்ம் குறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இருக்கபோவதில்லை. நான் சரியாக செயல்பட்டால் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்ற நல்ல வாய்ப்புள்ளது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நமது நாட்டுக்காக விளையாடுவதை மிகவும் தீவிரமாக எடுத்து கொள்வேன். இது பெரிய போட்டி என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அதேநேரத்தில் பதற்றமும் இருக்க தான் செய்கிறது. என்னால் பதற்றத்தை திறம்பட கையாள முடியும். இந்த போட்டிக்கு நன்றாக தயாராகி இருப்பதால் சிறப்பாக செயல்பட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.