`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைகள் இல்லாததால்தான் அதிமுக-வில் சலசலப்பு!' – கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,

“மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் இருந்ததோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் முடிவு என்பது மாறுபடுகிறது. ஒரு மாநிலத்தில் ஏற்பட்ட முடிவு மற்ற மாநிலத்தில் எதிரொலிக்கும் என்று கூற முடியாது. பிரியங்கா காந்தி வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்வரவு. நாடாளுமன்றத்தில் அவர் வருவது எங்களுக்கு வலு சேர்க்கும். ஹிண்டன்பர்க் விவகாரமும் அல்லது அதானி விவகாரமும் ஒரு தேர்தல் முடிவை மாற்றும் என்று கூற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்பவோம். நீதிமன்றத்திற்கு செல்வோம். அதானி விவகாரத்தை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற கம்பெனி மூலமாக தான் பல மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அதானி குடும்பம் தான் மின்சாரம் சப்ளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் பல மாநில அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுள்ளனர் என்பதுதான் குற்றச்சாட்டு. இதை விசாரிக்க வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு. ஒன்றிய அரசு உடனடியாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பல்வேறு மாநிலங்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் சி.பி.ஐ விசாரணைக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தி.மு.க-விற்கும் தொடர்பு உள்ளது என்று வரும் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை செய்ய வேண்டும். அனைத்து வழக்குகளுக்கும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பது கேட்பது தவறு. இருப்பினும், திருநெல்வேலியில் காங்கிரஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இது இதுவரை சி.பி.சி.ஐ.டி விசாரணையை அறிக்கையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாடு காவல்துறை மீது சி.பி.சி.ஐ.டி மீது நாங்கள் நம்பிக்கை இல்லாமல் இல்லை. தமிழ்நாடு போலீஸார் அதிக திறமை உள்ளவர்கள். விஜய் வருகையால் தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. விஜய் கட்சி தொடங்கியுள்ளார். மாநாடு நடத்தியுள்ளார். அந்த மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. அதிக அளவு கூட்டம் வந்தது உண்மை. எழுச்சி இருந்தது உண்மை. இருப்பினும் அது ஒரு உருவமாக வடிவமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் அரசியலுக்கு வந்திருந்தாலும் களத்திற்கு இன்னும் வரவில்லை. பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அவர் அறிவித்துள்ள கொள்கையிலேயே பல முரண்பாடுகள் உள்ளது. நடப்பு அரசியல் நிகழ்வு குறித்து இதுவரை எந்த கருத்தும் விஜய் வெளியிடவில்லை.

கார்த்தி சிதம்பரம்

திருமாவளவன் முதலமைச்சராக வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது அவருடைய கருத்து. அவருக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தற்போது கட்சி தொடங்கி தேர்தலையே சந்திக்காதவர்கள் எல்லாம் முதல்வராக வேண்டும் என்று கூறும் போது நீண்ட கால அரசியலில், போராட்ட களங்களில் இருக்கும் திருமாவுக்கு ஏன் வரக் கூடாது?. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இருக்கும். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று முதலில் நான் தான் குரல் கொடுத்தேன். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பு வந்தது. ஒரு தலைவர் மட்டும் அதை முதலில் எதிர்த்ததால் அதன் பிறகு என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார். கடவுள் மறுப்பு குறித்து திருமாவளவன் பேசியதாக எனக்கு தெரியவில்லை. அப்படி பேசி இருந்தால் தற்போது அவர் மனதை மாற்றி இருக்கலாம். அதனால்தான் அவர் பழனி கோயிலுக்குச் சென்றிருக்கலாம். இதற்கு விமர்சனம் செய்வதில் ஏதுமில்லை . கோயிலுக்கு செல்பவர்கள் அனைவருமே இந்துத்துவாவை ஆதரிப்பவர்கள் அல்ல. பா.ஜ.க-வின் இந்துத்துவா தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை தனிநபருக்காக மட்டுமே நடக்கிறது என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. சம்பவங்கள் எங்கே நடந்துள்ளது என்பதைதான் நாம் பார்க்க வேண்டும். அரசாங்க பள்ளி, நீதிமன்ற வளாகம் ஆகியவற்றிலேயே சம்பவங்கள் நடைபெறுகிறது. காவல்துறை விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்த வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. காவல்துறை ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சோதனைகள் நடத்த வேண்டும். அ.தி.மு.க-வின் சமீபகால கூட்டங்களில் நடக்கும் சலசலப்புகள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது. அது, அவர்களுடைய உட்கட்சிப் பிரச்னை. இருப்பினும், தற்போது அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் போன்று ஜெயலலிதா போன்று ஆளுமை இல்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.