Chennai Super Kings, IPL Auction 2025 | சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். சவுதி அரேபியா ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 ஏலத்தில் அஸ்வினை (Ravichandran Ashwin) 9.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து. இதனால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கிறார். மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பியதை அந்த அணி கொண்டாடி கொண்டிருக்கிறது. சிஎஸ்கே அணி எக்ஸ் பக்கத்தில் அஸ்வின் புகைப்படத்தை பகிர்ந்து ’திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’, ’அண்ணா வந்துட்டார்’ என்ற கேப்சன்களை போட்டு அமர்களப்படுத்திக் கொண்டிருக்கிறது.
முதல் செட் ஐபிஎல் ஏலத்தில் அமைதியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது செட் ஏலத்தில் அதிரடி காட்டியது. ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே ஆகியோர் ஏலத்துக்கு வந்ததும் அதிரடியாக ஏலத்தில் குதித்தது. ஏலத்தொகை ஏறினாலும் அடுத்தடுத்து தொகையை ஏற்றி அவர்களை ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ரச்சின் ரவீந்திரா (4 கோடி), டெவோன் கான்வே (6.25 கோடி), ராகுல் திரிபாதி (3.4 கோடி) ஆகியோரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.
இவர்களுக்கு அடுத்தபடியாகவே அஸ்வின் ஏலத்தில் வந்தார். அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுறுசுறுப்பானது. சன்ரைசர்ஸ், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அஸ்வினை ஏலத்தில் எடுக்க முயற்சித்தபோதும், சென்னை அணி விடவே இல்லை. குறிப்பாக எல்லா நேரத்திலும் அமைதியாக இருந்த பிளெம்மிங், அஸ்வின் பெயருக்கு மட்டும் டக்குடக்கென விலை ஏற்றத்தை அறிவித்துக் கொண்டே இருந்தார். இதன்மூலம் முன்கூட்டியே சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டது தெரிந்தது. கடைசியாக 9.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் அஸ்வின்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் விளையாட உள்ளார். தோனி, ஜடேஜா, அஸ்வின் காம்போ நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளனர். இந்த காம்போவை களத்தில் காண சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.