சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானை பாகன் மற்றும் அவரது உறவினரின் குடும்பங்களுக்கு நிதியுதவியாக முறையே ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருச்செந்தூர் திருக்கோயிலிலுள்ள 26 வயது நிரம்பிய யானை தெய்வானை, கடந்த 18 ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக அதனை பராமரிக்கின்ற யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரின் உறவினரான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிசுபாலன் ஆகியோரை தாக்கியதில் இருவரும் அகால மரணம் அடைந்தனர்.
இந்த துயரச் செய்தி கேட்டவுடன் முதல்வர் ஸ்டாலின் அக்குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொண்டு, ஆறுதல் கூறியதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிருந்து நிதி வழங்கிட உத்தரவிட்டார். இம்மாவட்டத்தின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த இரண்டு குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதி பெற்று தந்திருக்கின்றார்கள்.
யானை தாக்கிய இருவரையும் காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருக்கோயில் இணை ஆணையர் ஆகியோர் முயற்சித்தும் பலனளிக்காமல் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருக்கின்றார்கள். உயிரிழந்த யானை பாகன் உதயகுமார் திருக்கோயில் பணியாளர் என்பதால் அவருடைய மனைவிக்கு கல்வித் தகுதிக்கு ஏற்றார் போல் திருக்கோயிலில் பணி வழங்கிடவும், சிசுபாலனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்திடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உதயகுமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 2 லட்சம், திருக்கோயில் சார்பில் ரூ. 5 லட்சம் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன் சார்பில் ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 10 லட்சமும், அவரது உறவினர் சிசுபாலன் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொதுநல நிதி ரூ. 2 லட்சம், அறங்காவலர் குழுத் தலைவர் வழங்கிய ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூபாய் 5 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த உதயகுமாரின் இரண்டு குழந்தைகளுக்கான கல்வி செலவினை மாவட்ட அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையும் பிராத்தித்து கொள்வதோடு, இது போன்ற ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் இனி நடக்க கூடாது என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறோம். அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருக்கோயில் நிர்வாகமும், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளும்.
திருக்கோயில் யானையைப் பொறுத்தளவில் அது தாக்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே பழைய சூழ்நிலைக்கு திரும்பி, இறந்து போனவர்களை பார்த்து அழுத காட்சியை ஊடகங்களில் வந்த பதிவின் மூலம் பார்த்திருப்பீர்கள். இன்று காலை அந்த யானையை நான் நேரடியாக சென்று பார்த்து, அதற்கு கரும்பு துண்டுகளை வழங்கினேன். அந்த யானை இரண்டு கவலங்களுக்கு மேல் உணவை உட்கொள்வதை தவிர்க்கின்றது, தொடர்ந்து அந்த பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்று யானையை தற்போது பராமரித்து வருபவர் தெரிவித்தார்.
ஆகவே பொதுமக்கள் எவரையும் தற்போது யானையை நெருங்கி செல்ல அனுமதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும், வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையும் இன்னும் ஒரு வார காலம் யானையை தொடர்ந்து கண்காணித்து பின்னர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறி இருக்கின்றனர்.
புத்துணர்ச்சி முகாம் என்பது வேறு, யானைகளின் தேவைகளை நிறைவு செய்வது வேறு. கடந்த காலங்களில் யானைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அருகில் செய்யப்படாததால் புத்துணர்ச்சி முகாம் தேவைப்பட்டது. தற்போது 26 திருக்கோயில்களில் 28 யானைகளை நாங்கள் பராமரித்து வருகின்றோம். ரூ. 45 லட்சம் செலவில் யானைக்கு குளியல் தொட்டி, கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைப்படி உணவுகள், நடைபயிற்சி, 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை போன்றவை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வனத்துறையினர் வந்து யானையை முழுவதுமாக பரிசோதித்து அதன் தன்மையை அறிந்து, அதற்கு தேவைப்படுகின்ற உடற்பயிற்சி மற்றும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதனையும் பரிந்துரைக்கிறார்கள். இந்த அரசை பொறுத்தளவில் யானையும் ஓர் உயிர் என்பதை மதித்து பாதுகாத்து வருகிறது என்பதற்கு மதுரை கோயில் யானை நோய்வாய் பட்டபோது கண் சிகிச்சைக்கு டென்மார்க்கிலிருந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்ததே உதாரணமாகும்.
ஆகவே யானை புத்துணர்ச்சி முகாம் என்பது தேவைப்படவில்லை. வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களோடு கலந்து ஆலோசித்து, அப்படி புத்துணர்வு முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினால் நிச்சயம் அதையும் ஏற்றுக்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது.
வனத்துறை சட்டத்தின் படியும், தற்போது இருக்கின்ற விதிகளின்படி, வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகு தான் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரு சில இடங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் நிச்சயமாக அதனையும் ஒரிரு நாளில் நிவர்த்தி செய்வோம். பக்தர்களின் எண்ணங்களில், வழிபாட்டில் யானை என்பது ஒரு நம்பிக்கைக்குரியதாகும். ஆகவே அதை காக்கின்ற முயற்சியில் நிச்சயமாக இந்து சமய அறநிலையத்துறை ஈடுபடும்.
அதேபோல் பக்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் தீங்குகள் ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டுமோ அவற்றையும் பரிசீலித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும். வருங்காலங்களில் யானைகளுக்கு கூடுதல் இடம் தேவை என்றால் கூட அதையும் ஏற்படுத்தி தர துறை தயாராக இருக்கின்றது. டாக்டர் தமிழிசை எங்களோடு விமானத்தில் வந்தார். அவரிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்க செல்கிறோம் என்று சொன்னவுடன் மிகுந்த சந்தோசம் அடைந்து வரவேற்றார்’’ என்று தெரிவித்தார்.