பிஹாரில் நடைபெற்ற பேரவை இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
பிஹார் மாநிலத்தில் டராரி, ராம்கர், இமாம்கஞ்ச் மற்றும் பெலாகஞ்ச் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், டராரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட விஷால் பிரசாந்த் 78,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சிபிஐ-எம்எல் வேட்பாளர் 68,143 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
ராம்கர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அசோக் குமார் சிங் 1,362 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட சதிஷ் குமார் சிங் யாதவ் இரண்டாம் இடம் பிடித்தார்.
இமாம்கஞ்ச் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி மருமகள் தீபா குமாரி 5,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆர்ஜேடி சார்பில் போட்டியிட்ட ரவுஷன் குமார் தோல்வி அடைந்தார்.
பெலாகஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட பாஜக கூட்டணியில் உள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் மனோரமா தேவி 21,391 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆர்ஜேடி வேட்பாளர் விஸ்வநாத் குமார் இரண்டாம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.