மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் கணவர் தோல்வி அடைந்ததால் மின்னணு வாக்கு இயந்திரம் (இவிஎம்) மீது நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அனுசக்தி நகர் தொகுதியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் கணவர் பஹத் அகமது போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சனா மாலிக் (முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் மகள்) 3,378 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து, நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “அனுசக்தி நகர் தொகுதியில் முதல் 19-வது சுற்று வரை பஹத் அகமது முன்னிலையில் இருந்தார். அதன் பிறகு திறக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரத்தில் (இவிஎம்) 99% பேட்டரி இருந்தது. அதிலிருந்த வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர் சனா மாலிக் முன்னிலை பெற்றார். வாக்குப்பதிவின்போது ஒரு நாள் முழுவதும் வாக்களித்த நிலையில் இவிஎம்மில் 99% பேட்டரி இருந்தது எப்படி? 99% பேட்டரியுடன் இருந்த இவிஎம்களில் மட்டும் பாஜக கூட்டணிக்கு அதிக வாக்குகள் பதிவானது எப்படி?” என கேள்வி எழுப்பி உள்ளார். இந்தப் பதிவை அவர் தேர்தல் ஆணையத்துக்கு டேக் செய்துள்ளார்.