ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. 500 வீரர்களுக்கும் மேல் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். முக்கியமான வீரர்களை உள்ளடக்கிய Marquee Set 1, 2 ஆகியவை முடிவடைந்திருக்கிறது. இதில், சென்னை அணி நிறைய வீரர்களுக்கு முயன்று விலை அதிகமானதால் வாங்க முடியாமல் பின் வாங்கியிருக்கிறது. அந்த வீரர்களைப் பற்றி இங்கே.
முதல் இரண்டு செட்களிலும் மொத்தமாக 12 வீரர்கள் இருந்தனர். இந்த 12 வீரர்களில் கிட்டத்தட்ட 6 வீரர்களுக்கு சென்னை அணி கடுமையாக முயன்றிருந்தது. முதல் செட்டில் முதல் பெயராக அர்ஷ்தீப் சிங்கின் பெயர் வாசிக்கப்பட்டது. பஞ்சாப் அணிக்காக பல சீசன்களாக சிறப்பாக ஆடியிருக்கிறார். இந்திய அணிக்காகவும் டி20 போட்டிகளில் கலக்கி வருகிறார். இளம் வீரரான அவருக்கு முதல் ஆளாக சென்னை அணிதான் கையை தூக்கியது. 7 கோடி வரைக்கும் போட்டி போட்டு கையை தூக்கியது. இதன்பிறகு பின் வாங்கியது. கடைசியாக RTM மூலம் அர்ஷ்தீப் பஞ்சாப் அணியால் 18 கோடிக்கு வாங்கப்பட்டார். அதேமாதிரியே ஷமிக்கும் கொல்கத்தாவுடன் போட்டி போட்டு 8 கோடி வரை சென்றது அதன்பிறகு பின் வாங்கியது.
ஒரு வலுவான வேகப்பந்து வீச்சாளரையோ ஸ்பின்னரையோ எடுத்துவிட வேண்டும் என்பதில் சென்னை தெளிவாக இருந்தது தெரிய வந்தது. இதனால்தான் சிராஜூக்கும் சஹாலுக்கும் கூட சென்னை கையை தூக்கியிருந்தது. 5 கோடி வரை சஹாலுக்கு முயன்றது. சிராஜூக்கு 8.25 கோடி வரை முயன்றது. பௌலர்கள் கிடைக்கவில்லை என்பதால் ஒரு திடகாத்திரமான பேட்டருக்கும் சென்னை முயன்றது. அதனால் கே.எல்.ராகுலுக்கும் லிவிங்ஸ்டனுக்கும் சென்னை கொஞ்சம் முயன்று பார்த்தது. லிவிங்ஸ்டனுக்கும் 8.25 கோடியோடு பின்வாங்கிக் கொண்டது.
இந்த முதல் இரண்டு செட்களில் அதிகபட்ச தொகைக்கு கே.எல்.ராகுலுக்குதான் சிஎஸ்கே முயன்று பார்த்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்தது. 12.25 கோடியிலிருந்து உள்ளே வந்த சென்னை 13.75 கோடி வரைக்கும் கையை தூக்கியிருந்தது. அதன்பிறகு பின்வாங்கவே டெல்லி 14 கோடி ரூபாய்க்கு ராகுலை வாங்கியது.
சென்னை அணியின் கையில் 55 கோடி ரூபாய்தான் இருக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் எந்த வீரருக்கும் செல்லக்கூடாது என்பதில் சென்னை உறுதியாக இருக்கிறது.