ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் விருப்பம்தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் பால்பண்ணைச்சேரியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மகாராஷ்டிரா தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியிருப்பது ஜனநாயக பேராபத்து. பல மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அமெரிக்க நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள அதானியை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் 20 சீட்டுகள் மற்றும் ரூ.200 கோடி கேட்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து இருந்தார். அவருக்கு துணிச்சல் இருந்தால், அது எந்த கட்சி என்பதை தெரிவிக்க வேண்டும்.
அதேபோல, திமுகவிடம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பணம் வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில் பெரிய ரகசியம் எதுவுமில்லை. திமுக தேர்தல் செலவு செய்தது. அதற்காக, வங்கிக் கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் பகிரங்கமாக திமுக கணக்கு கொடுத்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் விருப்பம்தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு போராடி வருகிறது. டைடல் பூங்கா, சிப்காட் தொழிற்சாலைகள் என அனைத்தும் வரவேண்டும். ஆனால், அவை விளைநிலங்களை பாதிக்காத வகையில் தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.