தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்த சூழலில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சித்தம்பரம், “சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகள் தி.மு.க-வுக்கு கிடைப்பதற்குக் காங்கிரஸ்தான் முக்கிய காரணம். ஆனால் ஒவ்வொருமுறையும் சீட் கொடுப்பதில் கெடுபிடி செய்கிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் 2026 தேர்தலுக்கு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்” என்றார்.
அதற்கு தி.மு.க அமைச்சர் ரகுபதி, “எங்களது முதல்வர் ஸ்டாலின் ஆற்றியிருக்கும் சிறப்பான பணிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கும். யாருடைய தயவில் ஆட்சியமைக்க வேண்டிய சூழல் எங்களுக்கு வராது” எனப் பேட்டி கொடுத்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பிறகு வி.சி.க தலைவர் திருமாவளவனின் சமூக வலைதளப்பாக்கத்தில், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்” என பேசிய அவரது பழைய உரை பகிரப்பட்டது. இதற்கு வி.சி.க-வில் இருந்து ஆதரவும், தி.மு.க-வில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது.
இதற்கிடையில் த.வெ.க-வின் முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், “எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்” என அறிவித்தார். மேலும் 2026-ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான் அமையும் என பா.ஜ.க, பா.ம.க கருத்து தெரிவித்து வருகிறது. இந்த சூழலில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தை பொறுத்தவரை வித்தியாசமான சூழல் நிலவுகிறது. தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட கூட்டணி வைக்காமல் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதுதான் தற்போதைய நிலை. இரு கட்சிகளும் தனித்து நின்று வெற்றிபெறுவதோ, ஆட்சி அமைப்பதோ சாத்தியம் இல்லை.
மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வேறு மாதிரி பார்க்கிறோம். ஆட்சி அமைந்ததும் இரண்டு அமைச்சர் பதவி வாங்குவதை மட்டும் அதிகார பகிர்வு என்று நாங்கள் நினைக்கவில்லை. தேர்தலுக்கு கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அத்திட்டத்தை செயல்படுத்தும் கூட்டணி அமைய வேண்டும். இதுதான் முழுமையான கூட்டணி ஆட்சி. மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளாவில் அதைத்தான் செயல்படுத்தினோம். இங்கும் அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இதற்கிடையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. தி.மு.க ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது. கூட்டணியில் பங்கு இருக்கும். இடம் கேட்பார்கள், அதனை கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் கொடுத்தது இல்லை. போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகமான அக்கறை எடுத்து வருகிறார். எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பார்க்கமாட்டார். சட்டம் – ஒழுங்கை நிலை நாட்டுவதில் உறுதியாக இருப்பார்” என்றார். இதையடுத்து ஆட்சி அதிகாரத்தித்தில் பங்கு என்கிற கருத்து மீண்டும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ” ‘தி.மு.க இதுவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்ததில்லை’ என்று ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால் வருங்காலத்தில் கொடுக்கப்படுமா என்பது குறித்து அவர் கருத்துச் சொல்லவில்லை. அதேபோல் பாலகிருஷ்ணன், ‘தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட கூட்டணி வைக்காமல் தேர்தலில் வெற்றிபெற முடியாது’ என சொல்லியிருக்கிறார். அப்படி கூட்டணி வைக்கவில்லை என்றாலும் கூட சம்மந்தப்பட்ட கட்சிகள்தான் அதிக வாக்குகளை பெறுவார்கள். ஆனால் அவர்களுடன் கூட்டணி வைக்கும் சிறு கட்சிகளுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது.. பெரிய கட்சிகள் உங்களை கழட்டி விட்டால் உங்களது நிலைமை என்னவாகும்..
நீங்க எம்.பி, எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கிறீர்கள். எனவே கூட்டணியால் உங்களுக்கும் ஆதாயம் இருக்கிறது. பெரிய கட்சிகளின் வாக்குகள் உங்களுக்கு உதவுகிறது. உங்களது வாக்குகள் அவர்களுக்கு கைகொடுக்கிறது. நிலைமை இப்படியிருக்கும் சூழலில் கூட்டணி வைக்காமல் வெற்றிபெற முடியாது என சொல்ல வேண்டியதில்லை. அது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறார்கள். எனவே இதுபோல் பேசவேண்டியதில்லை” என்றார்.
இதுகுறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் காண்ஸ்டண்டைன்ட் ரவீந்திரன், “இதன் மூலமாக தி.மு.க, அ.தி.மு.க-வின் உதவி இல்லாமல் கம்யூனிஸ்டுகள் எம்.எல்.ஏ-க்களாக ஆக முடியாது என்பதுதான் அவரது கருத்து. இதில் மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…