சென்னை: ‘மழையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில், மாற்றுத் திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ சேவை மையம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
டெல்டா பகுதிகளில் மழை அதிகமாகப் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளதே?
அதற்கான பணிகள் எல்லாம் முறைப்படி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம். அதுதவிர மண்டலவாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களும் ஆய்வு செய்கின்றனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது. இதன் நகர்வு தமிழகத்தை நோக்கி வரும் என்று கூறப்படுகிறது. பெருமழை எதிர்பார்க்கப்படுகிறதா?
எதிர்பார்க்கிறோம், எதிர்பார்க்கவில்லை என்பது வேறு. நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக உள்ளோம்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்துக்கு தேவையான நிதி, இதர உரிமைகள் குறித்து பேச என்ன அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன?
நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, அவர்கள் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று தீர்மானங்கள் போட்டு அவர்களிடம் வழங்கியுள்ளோம். அதை வலியுறுத்தி அவர்கள் பேசுவார்கள்.
ராமதாஸ் கேள்விக்கு பதில்: அதானி விவகாரத்தில் தமிழகத்துக்கு அவர் வந்து சந்தித்ததாக கூறுவது பற்றி?
அதற்கு அமைச்சர் ஏற்கெனவே பதிலளித்துள்ளார். நீங்கள் அதை ‘ட்விஸ்ட்’ செய்ய வேண்டாம்.
அதானி யாரை வந்து சந்தித்தார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாரே?
அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விடுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு பதிலளித்தார்.
பள்ளிக் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் குறிப்பாக, காலை உணவுத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அருகில் அமரும் மாணவர்களுடன் பேசுவதுடன், அவர்களுக்கு உணவு ஊட்டியும் விட்டுள்ளார். இந்நிலையில், நேற்று எழில்நகர் மழலையர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் அடங்கிய பையை வழங்கினார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், திடீரென இரண்டு குழந்தைகள் அமர்ந்திருந்த இடத்தின் நடுவில் அமர்ந்தார். தரையில் அவர் கையை வைத்தபோது, கை வழுக்கியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு அமர்ந்த அவர், குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.