பாட்னா: பிஹார் ஒரு தோல்வியடைந்த மாநிலம் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோம் விமர்சனம் செய்துள்ளார். பிஹாரை சூடானுடன் அவர் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பிஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார். பிஹாரில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது கட்சி முதல் முறையாக போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இமாம்கஞ்ச் தொகுதியில் இவரது கட்சி அதிகபட்சமாக 22% வாக்குகள் பெற்றது. மற்ற 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிஹாரி சமூகத்தினர் மத்தியில் பிரசாந்த் கிஷோர் காணொலி வாயிலாக பேசியது: “தோல்வியடைந்த மாநிலங்களுக்கான பண்புகள் இங்குள்ள மக்களிடம் தெரிகின்றன. உதாரணமாக, சூடான் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருப்பது ஏன் என நாம் நினைக்கலாம். ஏனென்றால், ஒரு நாடு தோல்வியடைந்த நிலையில் இருக்கும்போது அங்குள்ள மக்கள் நமது குழந்தைகள் எப்படி படிப்பார்கள் என்று கவலைப்படுவதில்லை. சூடானில் யாரை சுட்டுக் கொல்வது, எந்த இடத்தை கைப்பற்றுவது என்ற கவலையில் உள்ளனர். பிஹாரிலும் அதே நிலைமைதான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
பிஹார் மிகவும் மோசமான நிலையில் உள்ள மாநிலம் என்பதை நாம் உணர வேண்டும். பிஹார் ஒரு நாடாக இருந்தால், அது மக்கள்தொகை அடிப்படையில் உலகின் 11-வது பெரிய நாடாக இருக்கும். மக்கள் தொகையில் நாம் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டோம். பிஹாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எனது நிர்வாகம் கல்விச் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும். இதற்கான நிதியை மதுவிலக்கை நீக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து பெறுவோம்” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.