புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட தமிழ்ச் செல்வன் மராட்டிய மண்ணில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். மராட்டிய அரசியல் களத்தில் தனக்கென முத்திரை படைத்திருக்கும் இவர், மும்பையில் உள்ள சயான் கோலிவாட தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். வெளிநாட்டுக்கு செல்லும் கனவோடு மும்பைக்கு சென்று ஏமாற்றப்பட்டவர், தற்போது அம்மாநிலத்தின் அமைச்சராகலாம் என்று பேசப்படும் அளவுக்கு தனது உழைப்பால் உயர்ந்திருக்கிறார். அவரை பற்றி காண்போம்.
நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை பரிசளித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் கட்சிகள் சிதறிக் கிடக்கும் நிலையில், பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் முடிவுகள் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே போன்ற மூத்த தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சரிவு காலம் தொடங்கிவிட்டது என்று கூறப்பட்ட நிலையில், பாஜகவே எதிர்பார்க்காத மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்று கூறினால், அது மிகையாகாது.
இதனிடையே, புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட தமிழ்ச் செல்வன் மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறார். மராட்டிய அரசியல் களத்தில் தனக்கென முத்திரை படைத்திருக்கும் இவர், மும்பையில் உள்ள சயான் கோலிவாட தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் தமிழ்ச் செல்வன். இவரின் தந்தை ராமையா ரங்கியார் (82) மற்றும் தாய் தங்கம் (73) ஆகிய இருவரும் விவசாய பின்னணியைக் கொண்டவர்கள். அவரது தந்தை ராமையா கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்பதும், அவரது சகோதரர்கள் மோகன் மற்றும் ஜீவநாதம் அதிமுகவில் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளி முதல் எம்எல்ஏ வரை: ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏஜென்ட் ஒருவர், தமிழ்ச் செல்வனை மும்பைக்கு அழைத்து சென்றுள்ளார். தமிழ்ச் செல்வனை அழைத்து வந்தவர், அவரை ஏமாற்றிய நிலையில், மும்பையில் தங்கி, ரயில் நிலையங்களில் கூலி வேலை செய்யத் தொடங்கினார். ஊருக்கு திரும்பி செல்ல விரும்பாத அவர், தனது துயர்மிகு நிலையைக் கண்டு துவண்டு போகாமல், மும்பையின் தாராவி மற்றும் சியோன் – கோலிவாடா பகுதிகளில் உள்ள தமிழர்களுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்தார். இவரது உதவி செய்யும் குணத்துக்காக பரவலாக அறியப்பட்டார். பின்னர் தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டு, தன்னை அரசியல் ஆளுமையாக நிலைநிறுத்திக் கொண்டார்.
மும்பை நகரின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் சரக்குப் பெட்டக ஒப்பந்ததாரராக பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்ச் செல்வன், 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் துணிச்சலுடன் செயல்பட்டதை மக்கள் இன்னும் நினைவுகூர்கிறார்கள். மேலும், அதில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோரை தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றினார். இவரது சேவையைப் பாராட்டி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் விருது வழங்கி கவுரவித்தார். இத்தகைய தன்னலமற்ற சேவையால் மும்பை மக்களிடையே பிரபலமடைந்த தமிழ்ச் செல்வன் ‘கேப்டன்’ என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்டார்.
அரசியல் பயணம்: பாஜகவில் இணைந்த அவர், மும்பை மாநகராட்சி உறுப்பினராக வென்று தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தமிழா்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியை உள்ளடக்கிய சியோன் – கோலிவாடா சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்.
தாராவியின் எல்லையான சியோன் – கோலிவாடா தொகுதியில் கணிசமான தென்னிந்திய மக்கள் வசிக்கின்றனர், ஆனால் தமிழ்ச் செல்வனுக்கு அனைவரும் ஆதரவளித்தனர். அப்போது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போதுகூட, “தற்போது அனைத்து அரசியல் கட்சிகளிலும் தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள், குஜராத்திகள், ராஜஸ்தானியர்கள் மற்றும் பிறரின் வாக்குகளால்தான் எனது வெற்றி உறுதியானது” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
2014 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்ச் செல்வன் 30.5% வாக்குகளையும், 2019-ல், 43.3% வாக்குகளைப் பெற்றார். இந்தத் தேர்தலிலும் அதே தொகுதியில் களமிறங்கிய தமிழ்ச் செல்வன், 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இது அவரது ‘ஹாட்ரிக்’ வெற்றி. இம்முறை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
தமிழ்ச் செல்வனை எதிா்த்துப் போட்டியிட்டு 65,534 வாக்குகளுடன் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் வேட்பாளா் கணேஷ் குமாரும் தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்டவர்தான். இந்த இருவரும் கடந்த தோ்தலிலும் எதிரெதிராகப் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதையே தான் விரும்புவதாகவும், தனக்கென்று தனி உதவியாளர்கூட இல்லை என்று பெருமிதம் கொள்கிறார் தமிழ்ச் செல்வன். மேலும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தனது எண்ணுக்கு எப்போது வேண்டுமென்றாலும் போன் செய்து குறைகளை கூறலாம் என்கிற அளவுக்கு அவர்களிடம் நட்பு பாராட்டி வருவதாக பெருமையாக கூறுகிறார்.
தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை நாயகன்: தமிழ்ச் செல்வனின் அரசியல் பயணம் மகாராஷ்டிராவில் உள்ள தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களிடமும் ஆழமாக எதிரொலிக்கிறது. ஓர் ஏழ்மையான தொழிலாளியாக இருந்து, ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் வரையிலான அவரது பயணம் விடாமுயற்சியின் களமாக அமைந்துள்ளது.